Saturday, July 31, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 4

ஆக்கமும் அழிவும்

நம் உடம்பு மட்டும் அதிசயம் அல்ல! வெவ்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் அதிசயங்களே! நாம் இவற்றைப் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், இயற்கையின் ஆக்கத்தை விடுத்து மனித ஆக்கத்தை உலக அதிசயங்களென ரசிக்கிறோம்!

இயற்கையில் ஆக்கம் மட்டுமில்லாமல் அழிவும் எந்தத் தடையுமின்றி நடக்கிறது. தோன்றியவை மறைய வேண்டுமென்பது இயற்கையின் விதி! இந்தக் கணத்தில் பல சிறகுகள் உதிர்ந்து பல தளிர்கள் துளிர்க்கின்றன; பல உயிர்கள் பிரிந்து பல உயிர்கள் பிறக்கின்றன. இயற்கையின் இந்த பிரமாண்ட மறுசுழற்சி (recycling) மனித சக்தியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று!

மனிதப் படைப்புகளைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம், நம் செயற்கைத் தயாரிப்புகளின் மறுசுழற்சியைத் திட்டமிட மறந்ததனால் இன்று சோடா கேன்களும், பிளாஸ்டிக்குகளும், சிலிகான் உதிரிகளும் எப்படி அழிக்கப்படவேண்டும் என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையின் ஆக்கமும் அழிவும் கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதால் தான், இன்று நாம் வாழ இந்தப் பூமியில் இடமிருக்கிறது! இதுவே இயற்கையின் சீரான இயக்கத்தின் சான்று! பிறப்பு அதிகமானால், சுனாமி போன்ற அழிவு சக்திகளும் அதிகமாகின்றன. மனிதனுக்கு சுனாமி துக்கத்தின் அடையாளம்; ஆனால், இயற்கைக்கு அது சீரான இயக்கத்திற்குத் தேவையான ஒரு ஆற்றல்! அவ்வளவுதான்!

மனம் எனும் புதிர்

இதுவரை சொன்னது போல் மனித உடம்பையும் இயற்கையின் இதர அம்சங்களையும் அதிசயமாய் பார்க்கக் கற்றுக் கொண்ட எனக்கு, சிவனடியார்களான சித்தர்களின் பாட்டுக்கள் உடம்பைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் புகட்டின. பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனேஇதன் அர்த்தம்: "என் மனித உடம்பாகிய இந்த ஊற்றைச் சரீரத்தை (துர்நாற்றமடிக்கும் உடல்), ஆபாசம் நிறைந்த கொட்டிலைப் (கொட்டில் என்றால் தொழுவம், அல்லது கொட்டகை என்று பொருள்) போன்ற உடலை, சதை (ஊன்) பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் நான் சோறிடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

இதே சாயலில் பட்டினத்தாரின் இன்னொரு பாடல்:

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே.

இதன் அர்த்தம்: "துர்நாற்றமடிக்கும் என் இந்த உடலை, இறந்தபின்பு சுடுகாட்டிற்கு அருகில் வாழும் நரிகளுக்கு ஒரு மூட்டை உணவாகப் போகப் போகிற இந்த உடம்பை, நான் தினமும் சோறும் கறியும் (மரக்கறியோ அல்லது மாமிசக் கறியோ) நிரப்பிய பாத்திரமாகிய என் உடம்பை சிற்றின்பத்தில் விழாமல் அருள் செய்வாய், இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

[குறிப்பு: நாற்றம் என்பதற்கு தூய தமிழில் வாசனை என்று பொருள். "கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ ..." என்ற ஆண்டாளின் பாடலில், வாசனை என்று பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வழக்குத் தமிழில் நாற்றம் என்பதை துர்நாற்றத்தைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம். இங்கும் அது துர்நாற்றம் என்றே பொருள்படுகிறது.]

நம் மனதின் உணர்வுகளை (emotions or feelings) விடுத்து இந்த வரிகளை சிலமுறை படித்துப் பாருங்கள். நம் உடம்பு நாறும் உடல்தான் என்பதில் சந்தேகமென்ன? வியர்வை நாற்றம்; சிக்குப் பிடித்த தலை நாற்றம்; மூக்கில் ஒழுகும் சளி நாற்றம்; வாய் நாற்றம்; ஊறும் எச்சில் நாற்றம்; ருசித்து உண்ட அறுசுவை உணவு தொண்டையைத் தாண்டி உள்ளே போய் வெளிவந்தால் நாற்றம்; மலம் நாற்றம்; புண்ணில் பெருகும் சீழ் நாற்றம்; உயிர் பிரிந்த பின்பு சில மணி நேரத்தில் மொத்த உடம்பே நாற்றம்! நாற்றத்தை வெறுக்கும் நமக்கு, நம் உடம்பிலேயே பல நாற்றங்கள் இருந்தும் நம்மால் நம் உடம்பை வெறுக்கமுடியாதிருக்கும் விந்தையைத்தான் இந்தப் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்படித் தெளிவில்லாமல் வெறுக்க வேண்டியதை விரும்பியும், விரும்ப வேண்டியதை வெறுத்தும், ஏன் பிறந்தோம் ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமலும் புரியாமலும், உறவுகளுக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் மூழ்கித் தத்தளிக்கும் மனம் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இதுவரை என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த அனுபவங்களின் மூலம் நான் புரிந்து கொண்ட மனம் பற்றிய அதிசயங்களை இனி பார்க்கலாம்.

தொடரும் ...

Monday, June 21, 2010

தலைமுறை இடைவெளி (Generation Gap)

என் சிறு வயதில், என்னை விட வயதில் மூத்தவர்களிடம் பேசுகையில் அவர்கள் பேச்சு என் நேரத்தை விரயமாக்குவதாகப் பட்டிருக்கிறது. இன்று நான் மற்றவர்களிடம் பேசும் போது என்னிடம் மற்றவர்கள் அதையே உணர்வதை நான் உணர்கிறேன். இதைத் தான் நாம் "தலை முறை இடைவெளி" என்கிறோம்! இதைப் பற்றி நான் சுய பரிசீலனை செய்தபோது, எனக்கு புலப்பட்ட சில விஷயங்கள்:
  • வயது ஏற ஏற தேடல் அதிகமாகிறது. தேடலின் பரிசு அனுபவத்தின் அறிமுகமும் ஏட்டு ஞானமும்!
  • இந்த அரைகுறை ஞானம் தருவது "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதை.
  • இதை மமதை என்று நாம் உணர்வதில்லை! மாறாக, நாம் பெற்ற சிறு ஞானம் மற்றவர் படும் கஷ்டத்தையும் தடுமாற்றத்தையும் நம்மை எளிதில் உணர வைப்பதால், அவர்களைத் திருத்தி அவர்களுக்கு வழிகாட்ட முற்படுகிறோம்.
  • நாம் யார் மற்றவருக்கு வழிகாட்ட? நமக்கு என்ன தகுதி இருக்கிறது? கிருஷ்ண பகவானே தன் உயிர் நண்பன் அர்ஜுனன் தன்னிடம் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முழுமையாகச் சரணடைந்த பிறகே கீதா உபதேசம் செய்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. கடவுள் அவதாரமே தன்னிடம் மற்றவர் சரணடைந்த பிறகே உபதேசம் செய்யும் பொழுது அற்ப மானிடரான நாம் எம்மாத்திரம்?
  • மேலும் ஞானிகள் உபதேசம் செய்வதில் கூட சூட்சமமாகத்தான் சிலவற்றைத் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பட்டுத் தெளிந்தால் தான் அனுபவம் வரும். சொல் புத்தி நம்மை ஆட்டு மந்தைபோல் மேய்ப்பவன் செல்லுமிடத்திற்குத்தான் செல்ல வைக்குமே தவிர, ஏன் செல்கிறோம் என்று புரியவைக்காது!
  • ஏதும் அறியாத நமக்கெதற்கு உபதேச ஆசை? மனிதன் பட்டுத்தான் தெளிய வேண்டும் என்ற நியதியை மாற்ற, தெளிவற்ற மனம் கொண்ட நாம் யார்?
என் வாழ்கையின் கஷ்டங்கள் கொடியவை என்று எண்ணிய எனக்கு, "இது கதை அல்ல, நிஜம்" (
http://www.techsatish.net/2010/05/gfdf.html) தொடரில் நான் பார்த்த "கானா" விஜி சொன்ன அவர் வாழ்ந்த வாழ்க்கையின் கதை, கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் என் வாழ்க்கை சொர்க்கம் என்று புரிய வைத்தது. அதாவது நான் செல்லும் "பட்டுத் தெளியும்" பாதை, "பட்டுத் தெளிந்தவனின்" (கானா விஜியின்) சொல்லை நேர விரயம் என்று நினைக்க வைக்கவில்லை.

என் மனதில் தோன்றி வந்த "தலைமுறை இடைவெளி" குறைவதே, எனக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள "தலைமுறை இடைவெளி" அதிகமாவதன் காரணம்!

ராவணன் - என் பார்வையில் ....

வழக்கமான பாணியில் இல்லாமல், மணிரத்னத்தின் மாறுபட்ட ஒரு படம். ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் மணிரத்னம் காட்டிய அக்கறை, வலுவான திரைக்கதை அமைப்பில் இல்லை. விக்ரமின் பிரமாதமான நடிப்புக்குத் தகுந்தாற்போல் வீரைய்யன் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் பார்வையாளரின் மனதில் பதிய இயக்குனரின் பங்களிப்பு இல்லை. வீரைய்யன் பயங்கரமானவன், காவல் துறையால் தேடப்படுபவன், ஒரு காவல் அதிகாரியின் மனைவியைக் கடத்தியவன் என்பதைச் சொன்ன இயக்குனர், அந்தப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்! பிரித்திவிராஜின் தேவா கதாப்பாத்திரமும் தெளிவில்லாத ஒன்றே! வீரைய்யன்தான் தன் இலக்கு என்று சொல்லிவிட்டு, சமாதானம் பேச வந்த வீரய்யனின் தம்பியைத் தேவையில்லாமல் தேவா ஏன் சுட்டுக் கொள்ளவேண்டும்? அப்படித் தன் தம்பியை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற தேவாவைக் கொல்ல வீரைய்யன் என்ற அந்தக் கொடூரனுக்கு வாய்ப்பு கிடைத்தும் ராகினிக்காகக் (ஐஸ்வர்யா ராய்) அவன் தேவாவைக் கொல்லாமல் விடுவது நெருடல். வீரய்யனின் தங்கையின் சாவுதான் படத்தின் முக்கியத்துவம் என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது! மேலும் பிரியாமணியின் காதல் நெருக்கத்தில் உள்ள எதார்த்தம் பிரித்திவிராஜ்-ஐஸ் நெருக்கத்தில் இல்லை.

இந்தக் குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் திரை அரங்கில் பார்க்கவேண்டிய படம்! இவ்வளவு அருமையாக இயற்கைச் சூழலைக் காட்டமுடியுமா என்று வியக்குமளவுக்கு உலகத்தரம் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. "உயிரே போகுதே ..." பாடல் பார்வையாளரின் மனத்தைக் கட்டாயம் தன் வசப்படுத்தும். விக்ரமின் முழுமையான உழைப்பு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது! பிரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். பிரித்திவிராஜும் விக்ரமிற்கு சளைக்காமல் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாராய்க்கு வயதானது பல காட்சிகளில் பளிச்செனத் தெரிவதால் விக்ரமும் பிரித்திவிராஜும் மிக இளமையாகத் தெரிகிறார்கள்!

ரோஜா, பம்பாய், குரு - படங்களில் உள்ள அழுத்தமும் சமுதாய நோக்கும், செய்தியும் ராவணனில் இல்லை! செவிக்கும், விழிக்கும் விருந்து - அவ்வளவுதான்!