Saturday, July 31, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 4

ஆக்கமும் அழிவும்

நம் உடம்பு மட்டும் அதிசயம் அல்ல! வெவ்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் அதிசயங்களே! நாம் இவற்றைப் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், இயற்கையின் ஆக்கத்தை விடுத்து மனித ஆக்கத்தை உலக அதிசயங்களென ரசிக்கிறோம்!

இயற்கையில் ஆக்கம் மட்டுமில்லாமல் அழிவும் எந்தத் தடையுமின்றி நடக்கிறது. தோன்றியவை மறைய வேண்டுமென்பது இயற்கையின் விதி! இந்தக் கணத்தில் பல சிறகுகள் உதிர்ந்து பல தளிர்கள் துளிர்க்கின்றன; பல உயிர்கள் பிரிந்து பல உயிர்கள் பிறக்கின்றன. இயற்கையின் இந்த பிரமாண்ட மறுசுழற்சி (recycling) மனித சக்தியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று!

மனிதப் படைப்புகளைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம், நம் செயற்கைத் தயாரிப்புகளின் மறுசுழற்சியைத் திட்டமிட மறந்ததனால் இன்று சோடா கேன்களும், பிளாஸ்டிக்குகளும், சிலிகான் உதிரிகளும் எப்படி அழிக்கப்படவேண்டும் என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையின் ஆக்கமும் அழிவும் கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதால் தான், இன்று நாம் வாழ இந்தப் பூமியில் இடமிருக்கிறது! இதுவே இயற்கையின் சீரான இயக்கத்தின் சான்று! பிறப்பு அதிகமானால், சுனாமி போன்ற அழிவு சக்திகளும் அதிகமாகின்றன. மனிதனுக்கு சுனாமி துக்கத்தின் அடையாளம்; ஆனால், இயற்கைக்கு அது சீரான இயக்கத்திற்குத் தேவையான ஒரு ஆற்றல்! அவ்வளவுதான்!

மனம் எனும் புதிர்

இதுவரை சொன்னது போல் மனித உடம்பையும் இயற்கையின் இதர அம்சங்களையும் அதிசயமாய் பார்க்கக் கற்றுக் கொண்ட எனக்கு, சிவனடியார்களான சித்தர்களின் பாட்டுக்கள் உடம்பைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் புகட்டின. பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே



இதன் அர்த்தம்: "என் மனித உடம்பாகிய இந்த ஊற்றைச் சரீரத்தை (துர்நாற்றமடிக்கும் உடல்), ஆபாசம் நிறைந்த கொட்டிலைப் (கொட்டில் என்றால் தொழுவம், அல்லது கொட்டகை என்று பொருள்) போன்ற உடலை, சதை (ஊன்) பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் நான் சோறிடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

இதே சாயலில் பட்டினத்தாரின் இன்னொரு பாடல்:

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே.

இதன் அர்த்தம்: "துர்நாற்றமடிக்கும் என் இந்த உடலை, இறந்தபின்பு சுடுகாட்டிற்கு அருகில் வாழும் நரிகளுக்கு ஒரு மூட்டை உணவாகப் போகப் போகிற இந்த உடம்பை, நான் தினமும் சோறும் கறியும் (மரக்கறியோ அல்லது மாமிசக் கறியோ) நிரப்பிய பாத்திரமாகிய என் உடம்பை சிற்றின்பத்தில் விழாமல் அருள் செய்வாய், இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

[குறிப்பு: நாற்றம் என்பதற்கு தூய தமிழில் வாசனை என்று பொருள். "கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ ..." என்ற ஆண்டாளின் பாடலில், வாசனை என்று பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வழக்குத் தமிழில் நாற்றம் என்பதை துர்நாற்றத்தைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம். இங்கும் அது துர்நாற்றம் என்றே பொருள்படுகிறது.]

நம் மனதின் உணர்வுகளை (emotions or feelings) விடுத்து இந்த வரிகளை சிலமுறை படித்துப் பாருங்கள். நம் உடம்பு நாறும் உடல்தான் என்பதில் சந்தேகமென்ன? வியர்வை நாற்றம்; சிக்குப் பிடித்த தலை நாற்றம்; மூக்கில் ஒழுகும் சளி நாற்றம்; வாய் நாற்றம்; ஊறும் எச்சில் நாற்றம்; ருசித்து உண்ட அறுசுவை உணவு தொண்டையைத் தாண்டி உள்ளே போய் வெளிவந்தால் நாற்றம்; மலம் நாற்றம்; புண்ணில் பெருகும் சீழ் நாற்றம்; உயிர் பிரிந்த பின்பு சில மணி நேரத்தில் மொத்த உடம்பே நாற்றம்! நாற்றத்தை வெறுக்கும் நமக்கு, நம் உடம்பிலேயே பல நாற்றங்கள் இருந்தும் நம்மால் நம் உடம்பை வெறுக்கமுடியாதிருக்கும் விந்தையைத்தான் இந்தப் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்படித் தெளிவில்லாமல் வெறுக்க வேண்டியதை விரும்பியும், விரும்ப வேண்டியதை வெறுத்தும், ஏன் பிறந்தோம் ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமலும் புரியாமலும், உறவுகளுக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் மூழ்கித் தத்தளிக்கும் மனம் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இதுவரை என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த அனுபவங்களின் மூலம் நான் புரிந்து கொண்ட மனம் பற்றிய அதிசயங்களை இனி பார்க்கலாம்.

தொடரும் ...

Monday, June 21, 2010

தலைமுறை இடைவெளி (Generation Gap)

என் சிறு வயதில், என்னை விட வயதில் மூத்தவர்களிடம் பேசுகையில் அவர்கள் பேச்சு என் நேரத்தை விரயமாக்குவதாகப் பட்டிருக்கிறது. இன்று நான் மற்றவர்களிடம் பேசும் போது என்னிடம் மற்றவர்கள் அதையே உணர்வதை நான் உணர்கிறேன். இதைத் தான் நாம் "தலை முறை இடைவெளி" என்கிறோம்! இதைப் பற்றி நான் சுய பரிசீலனை செய்தபோது, எனக்கு புலப்பட்ட சில விஷயங்கள்:
 • வயது ஏற ஏற தேடல் அதிகமாகிறது. தேடலின் பரிசு அனுபவத்தின் அறிமுகமும் ஏட்டு ஞானமும்!
 • இந்த அரைகுறை ஞானம் தருவது "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதை.
 • இதை மமதை என்று நாம் உணர்வதில்லை! மாறாக, நாம் பெற்ற சிறு ஞானம் மற்றவர் படும் கஷ்டத்தையும் தடுமாற்றத்தையும் நம்மை எளிதில் உணர வைப்பதால், அவர்களைத் திருத்தி அவர்களுக்கு வழிகாட்ட முற்படுகிறோம்.
 • நாம் யார் மற்றவருக்கு வழிகாட்ட? நமக்கு என்ன தகுதி இருக்கிறது? கிருஷ்ண பகவானே தன் உயிர் நண்பன் அர்ஜுனன் தன்னிடம் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முழுமையாகச் சரணடைந்த பிறகே கீதா உபதேசம் செய்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. கடவுள் அவதாரமே தன்னிடம் மற்றவர் சரணடைந்த பிறகே உபதேசம் செய்யும் பொழுது அற்ப மானிடரான நாம் எம்மாத்திரம்?
 • மேலும் ஞானிகள் உபதேசம் செய்வதில் கூட சூட்சமமாகத்தான் சிலவற்றைத் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பட்டுத் தெளிந்தால் தான் அனுபவம் வரும். சொல் புத்தி நம்மை ஆட்டு மந்தைபோல் மேய்ப்பவன் செல்லுமிடத்திற்குத்தான் செல்ல வைக்குமே தவிர, ஏன் செல்கிறோம் என்று புரியவைக்காது!
 • ஏதும் அறியாத நமக்கெதற்கு உபதேச ஆசை? மனிதன் பட்டுத்தான் தெளிய வேண்டும் என்ற நியதியை மாற்ற, தெளிவற்ற மனம் கொண்ட நாம் யார்?
என் வாழ்கையின் கஷ்டங்கள் கொடியவை என்று எண்ணிய எனக்கு, "இது கதை அல்ல, நிஜம்" (
http://www.techsatish.net/2010/05/gfdf.html) தொடரில் நான் பார்த்த "கானா" விஜி சொன்ன அவர் வாழ்ந்த வாழ்க்கையின் கதை, கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் என் வாழ்க்கை சொர்க்கம் என்று புரிய வைத்தது. அதாவது நான் செல்லும் "பட்டுத் தெளியும்" பாதை, "பட்டுத் தெளிந்தவனின்" (கானா விஜியின்) சொல்லை நேர விரயம் என்று நினைக்க வைக்கவில்லை.

என் மனதில் தோன்றி வந்த "தலைமுறை இடைவெளி" குறைவதே, எனக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள "தலைமுறை இடைவெளி" அதிகமாவதன் காரணம்!

ராவணன் - என் பார்வையில் ....

வழக்கமான பாணியில் இல்லாமல், மணிரத்னத்தின் மாறுபட்ட ஒரு படம். ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் மணிரத்னம் காட்டிய அக்கறை, வலுவான திரைக்கதை அமைப்பில் இல்லை. விக்ரமின் பிரமாதமான நடிப்புக்குத் தகுந்தாற்போல் வீரைய்யன் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் பார்வையாளரின் மனதில் பதிய இயக்குனரின் பங்களிப்பு இல்லை. வீரைய்யன் பயங்கரமானவன், காவல் துறையால் தேடப்படுபவன், ஒரு காவல் அதிகாரியின் மனைவியைக் கடத்தியவன் என்பதைச் சொன்ன இயக்குனர், அந்தப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்! பிரித்திவிராஜின் தேவா கதாப்பாத்திரமும் தெளிவில்லாத ஒன்றே! வீரைய்யன்தான் தன் இலக்கு என்று சொல்லிவிட்டு, சமாதானம் பேச வந்த வீரய்யனின் தம்பியைத் தேவையில்லாமல் தேவா ஏன் சுட்டுக் கொள்ளவேண்டும்? அப்படித் தன் தம்பியை இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்ற தேவாவைக் கொல்ல வீரைய்யன் என்ற அந்தக் கொடூரனுக்கு வாய்ப்பு கிடைத்தும் ராகினிக்காகக் (ஐஸ்வர்யா ராய்) அவன் தேவாவைக் கொல்லாமல் விடுவது நெருடல். வீரய்யனின் தங்கையின் சாவுதான் படத்தின் முக்கியத்துவம் என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது! மேலும் பிரியாமணியின் காதல் நெருக்கத்தில் உள்ள எதார்த்தம் பிரித்திவிராஜ்-ஐஸ் நெருக்கத்தில் இல்லை.

இந்தக் குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் திரை அரங்கில் பார்க்கவேண்டிய படம்! இவ்வளவு அருமையாக இயற்கைச் சூழலைக் காட்டமுடியுமா என்று வியக்குமளவுக்கு உலகத்தரம் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. "உயிரே போகுதே ..." பாடல் பார்வையாளரின் மனத்தைக் கட்டாயம் தன் வசப்படுத்தும். விக்ரமின் முழுமையான உழைப்பு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது! பிரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். பிரித்திவிராஜும் விக்ரமிற்கு சளைக்காமல் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாராய்க்கு வயதானது பல காட்சிகளில் பளிச்செனத் தெரிவதால் விக்ரமும் பிரித்திவிராஜும் மிக இளமையாகத் தெரிகிறார்கள்!

ரோஜா, பம்பாய், குரு - படங்களில் உள்ள அழுத்தமும் சமுதாய நோக்கும், செய்தியும் ராவணனில் இல்லை! செவிக்கும், விழிக்கும் விருந்து - அவ்வளவுதான்!

Sunday, June 20, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 3

உடம்பு என்ற அதிசயம் ....

பொதுவாகவே குழந்தைப் பிறப்பைப் பற்றி மனிதர்கள் இன, மொழி, நிற வேறுபாடில்லாமல் சொல்வது, "இறைவன் கொடுத்த வரம்!". இதை சில நாத்திக நண்பர்கள் இறைவன் கொடுப்பதென்றால் ஆணும் பெண்ணும் எதற்கு என்று கிண்டல் செய்வதைக் கேட்டிருக்கிறேன். முதலில் இந்தக் கேள்விக்கான பதிலை அலசிவிட்டு பின்பு உடம்பைப் பற்றி பேசலாம்.

குழந்தைப் பிறப்பிற்கு ஆணும் பெண்ணும் கருவிகள்தான் என்று பார்த்தோம். பெண்களுக்கு மாதவிடாய் முடிவடைந்து பத்துப் பதினைந்து தினங்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடையும். அந்தச் சமயத்தில், குழந்தை வேண்டும் பெற்றோரை மருத்துவர்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒருமுறை கலவியில் ஈடுபடச் சொல்கின்றனர். ஏனெனில், இயற்கையில் ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து (fusion) கரு உருவாவது உண்மை என்றாலும், அது நடந்தேற மருத்துவ ரீதியாக பல கஷ்டங்கள் உள்ளன. அவை இங்கு முக்கியமல்ல. ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் இணைய வைப்பதே (fusion) மனிதன் கையில் இல்லை என்பதுதான் இங்கு நான் சொல்லவருவது. டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்லக் கூடிய தொழில் நுட்பத்திலும் இதுவே உண்மை. கருத்தரித்த பின்பு குழந்தை வளர்ச்சியை நம்மால் சோதனை செய்து அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியுமே தவிர, அது இப்படித்தான் வளர வேண்டும் என்று நம்மால் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வருவதிலும் மருத்துவ ரீதியாகப் பல சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

இதையெல்லாம் மனதில் கொண்டு யோசித்தால் சில விஷயங்கள் நமக்குப் புரியும். குழந்தை உருவாக ஆணும் பெண்ணும் இணைவது மட்டும்தான் மனிதச் செயல். மனிதன் தன் குழந்தையின் உருவத்தை சிற்பி போலச் செதுக்குவதில்லை. அதன் அழகை ஓவியன் போல வண்ணம் குழைத்துத் தீட்டுவதில்லை. தன் குழந்தைக்குக் கை, கால், வாய், மூக்கு, கண் என்று ஒவ்வொரு புற உறுப்பும் இவ்வாறுதான் வேலை செய்யவேண்டும் என்று மனிதனால் தன் குழந்தையை டிசைன் செய்ய முடியாது. குழந்தை பிறந்தபின்தான் அதனால் பார்க்க முடிகிறதா, கேட்க முடிகிறதா என்று மருத்துவர்கள் முதலில் சோதனை செய்து உறுதிப் படுத்திக் கொள்கின்றனர். இப்படி நம்மால் செய்ய முடியாத ஒன்றை நாம்தான் செய்கிறோம் என்று வெட்டி இறுமாப்புடன் சொல்வதுதான் "குழந்தை பிறப்பு இறைவன் கொடுப்பதென்றால் ஆணும் பெண்ணும் எதற்கு?" என்ற கேள்வி. இதை இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், சிற்பி வடிக்கும் சிலையே தன்னால் தான் உருவானது என்ற உளியின் இறுமாப்பு போன்றதுதான் இந்தக் கேள்வி! இறைவன் கொடுக்கவில்லை என்பதை இந்தக் கேள்வி மூலம் அவர்கள் நிரூபிக்கவில்லை. அதே சமயம், குழந்தைப் பிறப்பு என்பது இறைவன்தான் கொடுத்தது என்பதும் நிரூபிக்கப்படாததே. குழந்தைப் பிறப்பு என்னும் புனிதம் மனிதன் கையில் இல்லை என்பதே நிதர்சனம்!

இனி உடம்பு என்ற சதைப் பிண்டத்தாலான அதிசய இயந்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். வேதியல் தனிம அட்டவணையில் மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏறத்தாழ நூற்றியிருபது தனிமங்கள் பட்டியல் இடப்பட்டிருக்கும். அதில் ஒரு சிலவற்றைத் தவிர மீதி அனைத்தும் இயற்கையிலேயே கிடைப்பவை. இவ்வாறு, இயற்கையில் கிடைக்கும் தனிமங்களால் ஆனதுதான் நம் உடம்பு. இது எலும்பு, சதை, நரம்பு, ரத்தம் போன்ற சமாச்சாரங்களை உள்ளடக்கித் தோல் போர்த்திய அதிசயம் என்பது நமக்குத் தெரியும். எனவே, நான் அதைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. என் பார்வை நம் உடம்பின் டிசைன் மற்றும் கட்டமைப்பின் அதிசயம் பற்றித்தான்.

நம் உடம்பின் இயக்கத்திற்குத் தலைமை மூளை என்னும் அதிசயச் சதைத் தொகுப்பு. மூளையையும் உடம்பின் இதர பிற உறுப்புகளையும் இணைப்பது நரம்புகள். இந்த நரம்புகள் அனைத்தும் ஒருசேர நமது தண்டுவடத்தின் ஊடே ஒருங்கிணைக்கப்பட்டு மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, மூளையினால் நம் உடம்பின் அனைத்து உறுப்புகளிலிருந்து வரும் உணர்வுகளை (input) உள்வாங்கிக் கொள்ளவும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆணையையும் கொடுக்க முடிகிறது. மூளை என்ற சதைப் பிண்டம் இப்படிச் செயல்படுவதே ஒரு பேரதிசயம்!

உடம்பின் நுண்ணிய பகுதி செல் என்றும் அதன் நுண்ணிய பகுதி அணு என்றும் பார்த்தோம். அணுவில் எலக்ட்ரான் எனப்படும் சமாச்சாரம் இருப்பதால், நமது அனைத்து உறுப்புகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் தொடர்பை எலக்ரான்கள் மின்சார வடிவில் எடுத்துச் செல்கின்றன. இங்கே கொஞ்சம் கொசுறான ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். பூமியில் உள்ள பொருட்களில் மின்கடத்தி, மின்கடத்தாப் பொருள்கள் என இருவகை உண்டு. அணுவின் கருவைச் (nucleus) சுற்றி எலக்ட்ரான்கள் ஒன்றுக்குமேற்பட்ட பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும். இதில் நியூக்ளியசுக்கு அருகிலிருக்கும் எலக்ட்ரான்கள் மீது நியூக்ளியசின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதேபோல், நியூக்கிளியசிலிருந்து தூரத்திலிருக்கும் (outer-most) எலெக்ட்ரான்கள் மீது இவ்விசை குறைவாக இருக்கும். இந்த எலக்ட்ரான்கள் தான் ஒரு அணுவிலிருந்து மற்ற அணுவுக்குத் தாவி மின்னியக்கத்தை ஏற்படுத்துபவை. இந்த மின்னியக்கமே மின்சாரம் எனப்படுகிறது. சில பொருட்களில் நியூக்ளியசை விட்டுத் தூரத்தள்ளியிருக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மிக அதிகமிருக்கும்; சிலவற்றில் இவை மிகக்குறைவாக இருக்கும். அதிகமிருந்தால், எலக்ட்ரான்கள் ஒரு அணுவிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவது எளிது. இத்தகைய பொருட்கள் மின்கடத்திகள். இந்த எண்ணிக்கை குறைவாய் இருந்தால், அவை மின்கடத்தாப் பொருட்கள். நம் உடம்பு மின்கடத்தி. எனவேதான் நமக்கு ஷாக் அடிக்கிறது. குறைந்த வோல்டஜை நம் உடம்பு தாங்கிக் கொள்ளும்; ஆனால், 220 வோல்ட்ஸ் நமக்கு மிக அதிகம்! அதுமட்டுமில்லாமல், ஆம்பியர் என்ற அளவீட்டில் சொல்லப்படும் மின்சாரத்தின் அளவும் மிக முக்கியம். நம் உடம்பில் கடத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமானால், நம் உடம்பு எரிந்து சாம்பலாகிவிடும். நம் வீட்டில் மின்சார வசதிக்காக பயன்படுத்தப்படும் தாமிரக் கம்பிகளில் கூட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து வெவ்வேறு விதமான கம்பிகளை பன்படுத்துகிறார்கள்.

கம்ப்யூட்டரில் கூட தகவல் தொடர்பு மின்சாரத்தின் மூலம் தான் நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். கம்ப்யூட்டரில் இதற்கு பைனரி (binary) எனப்படும் கணிதமுறைப் பயன்படுத்தப்படுகிறது. இதை டிஜிட்டல் கம்ப்யூட்டிங் என்றும் கூறுவார். சயன்ஸ் டெய்லி (sciencedaily.com) எனப்படும் இணையதள செய்தித்தாளில் மூளை அனலாக் (analog), டிஜிட்டல் (digital) என இரண்டு வகை செய்தித் தொடர்பு முறைகளையும் பயன்படுத்துகிறது என்று படித்திருக்கிறேன் (http://www.sciencedaily.com/releases/2006/04/060412223937.htm). ஆனால், நம் மூளையிலிருந்து உறுப்புகளுக்குச் செல்லும் தகவல் தொடர்பின் சூட்சமத்தை மனிதன் இன்னும் அறிந்தபாடில்லை.

மேலும், மின்சாரம் என்பதும் அதை வயர்களின் மூலம் கடத்த முடியும் என்பதும் மனிதனால் சில நூறு வருடங்களுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இந்தப் பூமியில் தோன்றி மடியும் மனிதனின் உடம்பிலும் செய்தித் தொடர்பு மின்சாரத்தால் தான் நடக்கிறது என்பதே மிக அதிசயம்! அதுமட்டுமில்லாமல், நரம்புகள் சீராக தண்டுவடத்தில் நுழைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக மூளையுடன் இணைந்திருப்பதைப் பார்க்கும் பொழுது மனித உடம்பின் நுட்பம், இன்றைய நெட்வொர்க் தொழில் நுட்பத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடுகிறது.

நுட்பம் மட்டுமில்லாமல், மனித உடம்பின் டிசைனில் efficiency (இதன் தமிழாக்கம் திறன்கெழு என்று ta.wikipedia.org-ல் எழுதப்பட்டிருக்கிறது) என்பதற்கும் பஞ்சமே இல்லை. சுவாசிக்கும் மூக்கை மோப்பத்திற்கும், ருசிமொட்டுகள் நிறைந்த நாக்கை பேச்சின் அதிர்வுகளுக்கும், கழிவு வெளியேறும் உறுப்புகளை மற்ற உறுப்புகளைவிட கேவலமானது என்று ஆக்காமல் மனிதனுக்குப் புனிதமான பிறப்பு என்னும் செயலின் மூலத்திற்கும் நம் உடம்பில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். மேலும், தொடுதிரை (touch screen) என்னும் ஒரு கருவியை கடந்த நாற்பது அல்லது ஐம்பது வருடத்திற்குள்தான் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். இதன் பயன்பாட்டை இந்நாளில் iPhone போன்ற கருவிகளில் காணமுடியும். ஆனால், காலகாலமாக மனிதனின் உடம்பை போர்த்தியிருப்பதற்காக மட்டுமில்லாமல் அதை எங்கு தொட்டாலும் அந்த உணரும் நம் தோல் என்ற நுட்பம் மனிதக் கண்டுபிடிப்பான தொடுதிரையையும் மிஞ்சியது. தொடுதிரைக்குத் தொடு உணர்ச்சி மட்டும்தான் உண்டு; ஆனால், நம் தோலுக்கு தட்பவெப்பத்தை அறியும் குணமும் உண்டு. இந்தவகையில், நம் தோலின் நுட்பம் தொடுதிரையைக் காட்டிலும் மிக அதிகமானது.

மனிதன் தயாரிக்கும் இயந்திரங்கள் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்வதில்லை. சில இயந்திரங்களில் மனிதன் சுயமாகத் தன்னைச் சரிசெய்துகொள்ளும் நுட்பத்தை படைத்திருக்கிறான். ஆனால், அதுவும், ஓரளவுக்குத்தான். ஆனால், ஜனனத்தில் இருந்து மரணம் வரை மனிதன் என்னும் சதையாலான இயந்திரம் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்கிறது. இது கரு தோன்றிய தினத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது.

கருப்பையினுள் இருக்கும்போது கருவுக்குத் தேவையான உணவும் கதகதப்பான சீதோஷ்ணமும் தாயிடமிருந்தே கிடைத்து விடுகிறது. குழந்தை ஜனித்தவுடன் அதன் பசியாறத் தாயின் தனத்தில் சுரக்கும் கொலோஸ்ட்ரம் (Colostrum) என்ற திரவம் குழந்தையின் செரிமானத்திற்கு தகுந்ததாகவும் குழந்தையின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டதாகவும் உள்ள அமிர்தம். அதன்பின் சுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட விலைமதிப்பில்லாத ஒன்று. இப்படித் தன் குழந்தைக்குத் தேவையான ஒவ்வொன்றையும் தானே தயாரித்துக் கொள்கிறது தாயின் உடம்பு! கருப்பையில் இருக்கும் வரை எல்லாம் கேட்காமலேயே கிடைத்து விடும். ஜனித்தபின் கேட்டுப் பெற வேண்டும். இப்படித் தன்னைத் தானே வளர்த்திக் கொள்ளும் விலை மதிப்பே இல்லாத சதை-எலும்பாலான இயந்திரம்தான் மனித உடம்பு.

Monday, June 7, 2010

Effects of Postpartum Depression!

Last month, I wrote the following to my friends. I think it is worth blogging ...

Recently, there are two cases of attempted murder-and-suicide in USA. Both are tamilians. The reason was found to be depression. Here are the links:

Fremont Mother, Infant Daughter Die In Murder-Suicide Arson Fire: http://www.ktvu.com/news/23528646/detail.html (May 13th, 2010)
Indian woman hurls toddler, self into river in U.S.: http://beta.thehindu.com/news/international/article431557.ece (May 16th, 2010)

I can not even imagine a mother killing her own baby and attempting for suicide. It is a very serious issue that we, Indians, have to understand. In this country, the postpartum depression is considered a very serious issue and they provide counselling too. I am not aware that anyone in our circle went for postpartum counselling. Neither we did! However, these two incidents really showed that Indians are no exceptions to postpartum depression! In my opinion, it is a time to consider such counselling even though we think the postpartum depression would not affect us.

Here is what I think why such depression could occur to Indians too. Logic and emotions are two important things for human beings. It is considered that men have higher logical sense than emotion. Similarly, women have more emotions than logic. That is why men criticize women's emotions about money, jewels, neighbors, friends, and relatives as if they (men) do not have any emotions! It is a myth! Everybody has emotions and certain level of logic, and the elasticity of tolerating them differs in every person. The truth is that both logic and emotions have equal weight in our life and none is better the other!

Having said that women have more emotion than logic, it is no surprise that they are affected by their emotions. They tend to show their emotions to others very easily than men. On the other hand, men resist their emotions to certain level (little more than women) and they too show their emotions to others inevitably. The resistance of emotions comes by the subconscious logical analysis of our mind by our past experience. Since, men are able to resist emotions to certain extend, they think that women are a the source of problems by their excessive emotions. Hence, they start ignoring women even when it is needed. The above two cases are clearly the evidence for such claim. In these both cases, women did not get proper support from their respective husbands.

When we go deep into such issue, we will realize that such depressions are not just due to the lack of support from respective husbands, but also due to following reasons,
 • Lack of support from parents: Since we live several thousand miles away from India, it becomes hard for our parents to support us enough. The reasons could be,
  • Visa problems
  • Duration of stay per trip
  • Expense for the trip to USA from India
  • Psychological fear that USA based families make their respective parents as unpaid servants!
 • Peer pressure: I think no men and women are exception to peer pressure. From the day one of planning for baby to how the child is brought up.
 • Comparison: Comparison is inevitable between children of same age. Even though we know every child is unique as flowers of blossom, we still tend to compare. Every child is as unique and beautiful as every flower is!
 • Lack of support from friends: As friends, we do have a social responsibility of supporting our friends and provide them counselling when they go through their hard times. I think this need is over shadowed by our emotions in our day-to-day life. The end result is emotions win, people hurt others knowingly or unknowingly, and people are messed up!
 • Finally, lack of enthusiasm to regulate our mind: Depression is a feeling that is no less than happiness, distress, anger, and jealousness etc. However, the outcome of it is worst than other feelings. We are stuck with our feeling because our mind wanders about many unwanted things in our life. Meditation is suggested for calming down our mind. But, our day-to-day needs and responsibilities look more important that 20 minutes of meditation every day.

Thursday, March 4, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 2

பிரபஞ்சம் பற்றி மேலும் ...

"ஒன்றின் தன்மை மற்றொன்றுக்கு ஏன் இருப்பதில்லை?" என்ற என் பாமரத்தனமான கேள்விக்கான பதிலை அறிவியல் இன்னும் குழப்பியது. ஒவ்வொரு பொருளும் அடிப்படையில் ஒரு மிகச் சிறிய பொதுவான பொருளால் (matter) ஆனது என்று அரிஸ்டாட்டில் சொன்னார். அவர் காலத்திலிருந்து முன்னேறிய அறிவியல், இன்று அந்த மேட்டர் என்பதை அணு என்று கண்டுபிடித்திருக்கிறது. அணுக்களின் தொகுப்பு மூலக்கூறு (molecules). மூலக்கூறுகளின் தொகுப்பு செல். செல்களின் தொகுப்பு திசு. திசுக்களின் தொகுப்பு சதை. சதையால் ஆனது உடம்பு. இது நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பொருந்தும்.

அணு என்பது என்ன? நியூக்கிளியஸ் என்ற கருப்பொருளும் அதைச் சுற்றும் எலக்ட்ரான் என்னும் விஷயங்களும் ஆகும். எலக்ட்ரான்கள் சுற்றும் பாதையின் எல்லையே அணுவின் அளவு. எனவே அணு என்பது எலக்ட்ரான்கள் சுற்றும் வெளி. இதை நம் சூரியக் குடும்பத்துடன் ஒப்பிடலாம். அணு என்பது நினைத்துப் பார்க்க முடியாத மிகச் சிறிய சமாச்சாரம். சூரியக் குடும்பம் நினைத்துப் பார்க்கமுடியாத பிருமாண்டம். இப்படிப் பார்த்தால் ஆன்மீகம் சொல்லும் ஆத்மா பரமாத்மாவுக்கு விளக்கம் கிடைப்பது போல் தோன்றும். ஒவ்வொரு அணு என்ற ஆத்மாவும் பிரபஞ்சம் என்ற பரமாத்மாவின் அங்கம். இதுதான் உண்மை என்று சொல்லவில்லை. ஆன்மீகப் பார்வையில் அணுவும் பிரபஞ்சமும் இப்படி இருக்கலாமோ என்ற எனது பாமரத்தனமான எண்ணம் தான்.

நீராகட்டும், நிலமாகட்டும், அனைத்தும் அணுவால் ஆனது. இப்படி உயிருள்ளவை உயிரற்றவை அனைத்திலும் எலக்ட்ரான்களின் இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படி அணுக்களின் சங்கமாக இருக்கும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான தன்மை இருப்பது தான் ஆச்சர்யம். காற்றிலும் அணு, நீரிலும் அணு; ஆனால் அவற்றின் தன்மை வேறு. அதுமட்டுமில்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறவும் கூடியது. ஒன்று மற்றொன்றாக மாறும் என்று சொல்லும் அறிவியலுக்கு இந்த மாற்றங்கள் ஏன் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், ஆக்கத்திற்கும் நினைத்தே பார்க்க முடியாத அழிவிக்கும் அணுவே காரணகர்த்தா.

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தும் அணுவால் ஆனதால் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது. விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் தாவரத்துக்கும் உயிரிருப்பதாகக் கூறினார். மேலும், அவர் உயிரற்ற பொருட்களிலும் ஒரு இயக்கம், ஒரு உயிரோட்டம் இருப்பதாகக் கூறினார். இந்த இயக்கம் தான் எனர்ஜி என்று க்வாண்டம் மெக்கானிக்ஸால் அழைக்கப்படுகிறது. அதனால் கல்லும் மண்ணும் தங்கமும் வைரமும் மனிதனும் மிருகமும் பறவையும் பூச்சியும் புல்லும் பூடும் மரமும் அனைத்தும் சரிசமம் என்பது மட்டுமில்லாமல் அவை அனைத்தின் தோற்றத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுவானது. இந்த அறிவியல் அறிவையும் ஆன்மீகத்தையும் பின்பு அலசலாம்.

உயிரும் உடம்பும்

பிரபஞ்சம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயம். பூமியும் பிரபஞ்சத்தில் ஒரு அங்கம் தான். உண்மையில் வானம் என்பது ஒரு எல்லையற்ற வெளி. அதில் மிதக்கும் கிரகம்தான் நாமிருக்கும் பூமி. எனவே, நாம் வேறு பிரபஞ்சம் வேறு என்று நினைக்கத் தேவையில்லை. நாமும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. பூமிக்கு மேல் ஒரு மைக்ரோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வெளி கூட வானம்தான். இந்த மனநிலையில் பார்க்கும் போது, வானம் நிஜமாகவே நம் கைக்கு எட்டிவிட்ட தூரம்தான்!

பிரபஞ்சத்தின் துகளான பூமியே நமக்கு பிருமாண்டம் எனும் பொழுது, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் பேசுவது அர்த்தமற்றது. இனி பூமி, இயற்கை என்று நம்மால் உணரக் கூடிய விஷயங்கள் பற்றி மட்டும் பேசுவோம்.

இந்தப் பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழத் தேவையான அனைத்தும் இந்த பூமியிலேயே கிடைக்கிறது. அதன் வாழ்க்கை முடிந்ததும் அதன் உடல் இந்த பூமிக்கோ அல்லது இந்த பூமியில் வாழும் மற்ற உயிர்களுக்கோ அல்லது நெருப்புக்கோ இரையாகிறது. அப்படியானால், வாழ்வு தொடங்கி முடியும் வரை அந்த உயிரினத்தின் உடலை இயக்கும் சக்தி எது? உயிர் என்று நாம் கூறுவது அறிவியலா, ஆன்மீகமா? நாம் இறந்த பிறகும் நம் உடம்பில் சில பகுதிகள் உயிருடன் இருக்கும். அந்தந்தப் பகுதியிலிருக்கும் செல்கள் சாகும் வரை நகம் வளரலாம், முடி கூட வளரலாம்! அப்படியானால் நம் உயிர் என்பதற்கும் நம் உடம்பின் செல்களுக்கும் சம்பந்தம் இல்லை.

அப்படி என்றால், இதயத் துடிப்புதான் உயிரா? இதயம் துடிப்பது எப்படி? இதயத்தின் வேலை ரத்த சுத்திகரிப்பு. அந்த வேலையின் ஆதாரம் இதயத்தின் துடிப்பு. இதயத் துடிப்பு நின்றால், சில நிமிடங்களுக்குள் உயிர் போய் விடும். இதயம் ஏன் துடிக்கவேண்டும்? அதன் இயக்கத்தின் மூலம் என்ன? இதயம் என்பது ஒரு தானியங்கி உறுப்பு என்றால், அதை அடிப்படையாகக் கொண்டு, மின்சாரம் போன்ற சக்தியின் உதவியில்லாமல் ஒரு இயக்கத்தை, ஒரு ஆற்றலை மனிதனால் ஏன் உருவாக்க முடியவில்லை. உயிரிருப்பதால் இதயம் துடிக்கிறதா, இல்லை இதயத் துடிப்பால் உயிர் இருக்கிறதா?

பாமரனான எனக்கு, மூளையின் செயலிழப்பே மரணம் என்று அறிவியல் கற்பித்தது. இது ஓரளவுக்கு என் கேள்விக்குப் பதில் அளிப்பதாக இருந்தது. மூளைதான் நம் உடம்பின் அனைத்துச் செயல்களையும் செயல்விக்கும் உறுப்பு. அந்த உறுப்புக்கு உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படும் தொடு உணர்ச்சி, வலி போன்றவை தெரியுமே தவிர, அதற்கு ஏற்படும் வலி தெரிவதில்லை. மூளையின் இயக்கம் நின்றால் மரணம் என்று புரிந்து கொண்ட எனக்கு, அதன் இயக்கத்தின் மூலமென்ன என்று புரியவில்லை. இந்தக் கேள்வியை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கம்ப்யூட்டரின் சிபியூ எனப்படும் சென்டரல் ப்ராசஸிங் யூனிட்டின் செயல்பாட்டோடு மூளையை ஒப்பிடவேண்டும். கம்ப்யூட்டரின் சிபியூ-தான் அதில் ஓடும் அனைத்து மென்பொருள்களின் ஆணைத்தொடர்களையும் (software programs) படித்து இயங்குவது (executes). அது இயங்க மின்சாரம் என்ற சமாச்சாரம் தேவை. மின்சாரம் இல்லையேல் கம்ப்யூட்டர் வேலை செய்யாது. அதாவது மின்சாரம் சிபியூ-வின் இயக்கத்தின் மூலகாரணம். அதுபோல, மூளையின் இயக்கத்தின் மூலம் என்ன என்பதே எனது கேள்வி. அதன் மூலம் உயிரென்றால், உயிர் என்பது என்ன?

உயிர் (soul) என்பதை அறிவியல் ஒத்துக் கொள்வதில்லை. உயிர் என்பது இருப்பதை அறிவியல் ஒத்துக் கொள்ள நிரூபணம் வேண்டும். அதனால்தான் மரணத்தை "மூளையின் செயலிழப்பு" (brain death) என்று அறிவியல் கூறுகிறது. ஒரு உயிர் வாழ்கிறதா அல்லது இறந்துவிட்டதா என்றுதான் அறிவியலால் கணிக்க முடியும். ஆனால், ஆன்மீகம் உயிர் இருக்கிறதா இல்லையா என்று கணிக்க வழி சொல்வது மட்டுமில்லாமல், உயிரை பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாது என்பதை தெளிவாகவே கூறுகிறது. இங்கு நான் ஆன்மீகம் என்று சொல்வது பகவத் கீதையை. எனவே, உயிர் என்பதை என் ஆய்ந்தறியும் அறிவைக் கொண்டு என்னால் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. உயிர் என்பது இன்று வரை எனக்குப் புதிர் தான்!

ஆன்மீகம் எனக்கு உயிரைப் பற்றி ஓரளவு தெளிவைக் கொடுத்தது. உயிர் என்பது இருப்பதாக ஆன்மீகத்தின் அடிப்படையில் கற்பனை செய்து கொள்ள முடியும். உயிர் இருந்தால் இந்த உடம்புக்கு என்ன பெயரிடப்பட்டிருக்கிறதோ, அதுதான் இந்த உடம்பின் அடையாளம். உயிர் பிரிந்தால், அது அரசனோ ஆண்டியோ, எந்த உடம்பானாலும் பிணம் தான்! இதை பட்டினத்தார் மிக அழகாக பாடியிருக்கிறார்:

காம்பிணங்கும் பனைத்தோளார்க்கும் பொன்னுக்கும் காசினிக்கும்
தாம்பிணங்கும் பல ஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப்புரண்டு இனிமேல்
சாம்பிணம் கத்துதையோ? என்செய்வேன் தில்லைச் சங்கரனே.


இதன் அர்த்தம்: "பெண்ணுக்கும், பொன்னுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்து பல நிறைவேறா ஆசைகளுடன் செத்துப்போன பிணத்தை, திரளாகக் கூடி அழுது புரண்டு இனி எதிர்காலத்தில் சாகப்போகும் பிணங்கள் கத்துகின்றன. ஐயோ! நான் என்ன செய்வேன், தில்லையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!".

இறந்த பிணத்துக்காக உயிர் வாழும் பிணங்கள் அழுவதாகப் புரிந்து கொள்ளும், இந்த ஞானம் ஆன்மீகத்தைத் தவிர வேறெங்கும் நமக்குக் கிடைக்காது. இதைச் சமீபத்தில் கூட, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மரணமடைந்த செய்தியைப் படித்த போது, உணரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுஜாதா அவர்கள் மரணமடைந்த தினத்தில், அவரின் மனைவியிடம் ஒரு மனிதர் கேட்டாராம், "பிணத்தை எப்பொழுது எடுக்கப் போகிறார்கள்?" என்று. இதை மிகவும் வருத்தத்துடன் சுஜாதாவின் மனைவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சுஜாதா என்ற அந்த மாமேதை கூட அன்று பிணமாகத்தான் பார்க்கப்பட்டார் என்ற உண்மை எனக்கு உறைத்த போது எனக்கு பட்டினத்தாரின் மேற்கூறிய வரிகள் தான் ஞாபகம் வந்தது.

பிறப்பும் இறப்பும்

இப்படிப்பட்ட பிறந்து அழியும் இந்த உடம்பின் பிறப்பைப் பற்றி அறிவியல், ஆணும் பெண்ணும் கூடுவதால் ஏற்படும் இனப்பெருக்க நிகழ்வு என்று கூறுகிறது. ஆணின் விந்தணுவும் பெண்ணின் கரு முட்டையும் இணையும் பொழுது இப்படிதான் நிகழும் என்று கூறும் அறிவியல், அது ஏன் அப்படி நிகழ்கிறது, அது நிகழ மூல காரணம் என்ன என்று கூறவில்லை. பிறப்பின் மூல காரணமே தெரியாத பொழுது, அதன் இயக்கத்தின் மூல காரணமோ, அதன் முடிவின் மூல காரணமோ எனக்கு, நான் வாழும் காலத்திற்குள், விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த மாதிரி குழப்பங்கள் வரும் போது ஆன்மீகம் தவிர வேறொன்றும் எனக்குத் துணை வருவதில்லை.

இருப்பினும் இனப்பெருக்கம் என்ற அதிசயத்தைப் பற்றி அலசி ஆராயலாம். மனிதனானாலும் தாவரமானாலும், மற்ற உயிரினம் எதுவானாலும், அதன் பிறப்பு என்னும் செயல் இயற்கையில் ஆட்டோமேட் பண்ணப்பட்டிருக்கிறது. பெரும்பாலான உயிரினங்களில் இனப்பெருக்கம் நடக்க ஆண் என்றும் பெண் என்றும் இரண்டு விதமான பிரிவு தேவை. அதாவது, ஒரு பிறப்பின் மூலக் கருவிகள் ஆண், பெண் என்ற இரு எதிர்மறைப் பாலினங்கள். சில உயிரினங்கள் ஆண் பெண் கலவி (உடலுறவு) முறையில்லாமலேயே இனப்பெருக்கம் அடைகின்றன. உதாரணமாக ஓரறிவு உயிர்களில் ஒரு செல் பலமடங்கு தன்னைத்தானே உற்பத்தி செய்து கொள்கிறது. இதைக் குளோனிங் என்கிறார்கள். சில காளான்கள் மகரந்தச் சேர்க்கை இல்லாமலேயே இனப்பெருக்கம் அடைகின்றன. நாம் இதையெல்லாம் ஆராய வேண்டாம். நம் இப்போதைய தேவை நம் மூலம். எனவே கலவி முறை இனப்பெருக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த எதிர்மறை விஷயங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்தலே பிறப்பின் முதல் படி. இந்த ஈர்ப்பு ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு விதமாக நடக்கிறது. இதில் மனிதனுக்கு உதவுவது புறத்தோற்றம், மேனியின் இயற்கையான வாசனை, செயற்கை திரவியங்களினாலான மேனியின் வாசனை, அந்த இனப்பெருக்க நிகழ்வின் உடற்சுகம் ஆகியவை. இந்தப் பகுதியில் நான் புலன் உணர்வுகளையோ, அதனால் மனதில் ஏற்படும் சலனங்களையோ, அப்படிப்பட்ட சலனங்களால் நம் உடம்பில் ஏற்படும் வேதியல் மாற்றங்களையோ பற்றிப் பேசப் போவதில்லை. இந்தப் பகுதியில் என் பார்வை மனதுக்கு அப்பாற்பட்ட ஈர்ப்பைப் பற்றி மட்டுமே.

சில விலங்குகள் தான் ஏற்படுத்தும் ஒலியைக் கொண்டோ, அல்லது தனது மேனியின் பல வண்ணங்களைக் கொண்டோ தன் எதிர்பாலினத் துணையை ஈர்ப்பதாக நான் படித்திருக்கிறேன். ஓரிடம் விட்டு மறு இடம் நகர முடியாத தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கை மூலம் விருத்தியடைய மற்ற உயிரினங்கள் துணை புரிகின்றன. பூக்கள் தாவர இனப்பெருக்கத்தின் ஒரு கருவி. இதனால்தானோ என்னவோ பெண்களை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். நாம் உண்ணும் அரிசி உற்பத்தி கூட இந்த ஆண் பெண் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் மகசூல் செய்யப்படுகின்றன.

தாவரத்தின் வித்தை அந்தந்தத் தாவரமே தோற்றுவிக்கிறது. மனித இனத்தின் வித்து மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. எப்படி ஒரு நெல் விதை பல நெல் மணிகளைத் தோற்றுவிப்பது, அது மற்ற உயிரினங்களுக்கு அதும் குறிப்பாக மனிதனுக்கு உணவாவதற்காகவோ, அது போல் மனித இனப் பெருக்கத்திற்கும் காரணம் இருக்கலாம் என்றே நான் நம்புகிறேன். இதைப் பற்றி பின்பு அலசலாம். ஆனால், நம் இப்போதைய தேவை, இயற்கையில் இனப்பெருக்கம் நடக்க ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது மட்டும்தான். இதன்படி, ஒரு மனித உடம்பு மற்றொரு உடம்பைத் தோற்றுவித்தே ஆகவேண்டும்! எனவே, ஒரு குழந்தை பிறக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இயற்கையின் கருவிகள். அவ்வளவுதான்! குழந்தை பிறந்தவுடன், அதுவும் அதை பெற்றவர்களைப் போல் ஒரு தனி உயிர். அந்தக் குழந்தை நாளை மற்றொன்றைப் பெற்றெடுக்கும். பெற்றவர்களுக்கு அந்தக் குழந்தையை பெற்றெடுக்கும் உரிமை உள்ளதே தவிர, அந்த உயிரைத் தனது என்று சொந்தம் கொண்டாடவோ அல்லது அதன் உயிரைப் பறிக்கவோ உரிமை இல்லை. மனிதனுக்கும் அவன் ஏற்படுத்திக்கொண்ட சட்டதிட்டங்களுக்கும் ஒரு புதிய உயிரைத் தோற்றுவிப்பது புனிதமானது; ஆனால் ஒரு உயிரைப் பறிப்பது "கொலைக் குற்றம்". இன்று நம்மைச் சார்ந்து வாழும் நாம் பெற்றெடுத்த குழந்தை, பிற்காலத்தில் நம்மைப் பிரிந்து போவதும், நம்மிடம் கருத்து வேறுபாடு கொள்வதும் இயற்கையே. சொந்தம் என்பது வெறும் மனிதனின் மனம் சம்பந்தப் பட்ட விஷயம். ஆனால், இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித் தன்மை வாய்ந்த மனிதப் பிறப்பு!

இப்படி, இனப் பெருக்கமே இயற்கையின் இயற்பியல் விதிப்படி மனிதப் பிறப்பின் நோக்கம் என்னும் பொழுது, அதற்குக் காரணமாகும் உடலுறவு என்ற செயல், மனிதனுக்கு இயற்கை அருளிய ஒரு புதிய மனித உயிரைத் தோற்றுவிக்கும் ஒரு புனித காரியம் ஆகிறது. கூலியில்லாமல் எந்த வேலையையும் நாமோ மற்ற உயிரினமோ செய்வதில்லை. பசி என்று ஒன்று ஏற்படுவதால் தான் உணவு தேடும் காரியத்தில் இறங்குகிறோம். அதுபோல், இந்த உடலுறவு என்னும் புனிதக் காரியம் நடைபெற இயற்கை நமக்கு அளிக்கும் கூலி, உடலுறவு சுகம். இந்த சுகத்தைப் பெற்றுக்கொண்ட மனிதன், அதற்கு அடிமையாவது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த சுகத்தில் அடிமைப்பட்டு அதன் மேல் மோகம் கொண்டு அதை மேலும் மேலும் அடையத் துடிக்கும் போதுதான் புனிதம், கேவலமான அசிங்கமாகிறது. இந்த அசிங்கம் மனிதனுக்கு மட்டும்தான். இயற்கையின் பார்வையில் மனித இனப்பெருக்க இயக்கம் நடந்து கொண்டேயிருக்கிறது. அதற்கு முறையான அல்லது முறை கெட்ட மனிதப் பிறப்பு என்ற வித்தியாசம் எல்லாம் தெரிவதில்லை. பிறப்பு எப்படி இருந்தாலும், இயற்கையில் பிறந்த மனிதன் வாழ்ந்து இறக்கிறான்.

Tuesday, March 2, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தான் துன்பப்படும் பொழுது நினைக்கும் கேள்வி "எனக்கு மட்டும் ஏனிந்தக் கஷ்டம்?". நான் மனிதன் என்று குறிப்பிடுவது ஆண், பெண், திருநங்கையர் என அனைவரையும் சேர்த்துதான். இந்தக் கேள்விக்கு எவரும் விதிவிலக்கல்ல. மனிதன் வாழ்க்கையைப் பற்றி தன் தேடலைத் துவங்க, இந்தக் கேள்விதான் அஸ்திவாரம்.

என் வாழ்விலும் இதுவரை நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேர்ந்தது. நான் ஏற்ற தாழ்வுகள் என்று சொல்வது, என் மனதில் ஏற்பட்டவையே. பத்தாவது முடித்தவுடன், மூன்று வருடம் மின்னணுப் பொறியியல் துறையில் டிப்ளோமா படித்துவிட்டு, அதன்பின் எங்கள் வீட்டுப் பொருளாதாரம் காரணமாக மேற்படிப்பு எனக்கு எட்டாக் கனியானதால், எனக்கு என் "குறைந்த அளவு" படிப்பைப் பற்றியத் தாழ்வு மனப்பான்மை என் மனதில் நெடுங்கலமாகக் குடிகொண்டிருந்தது. என் வாழ்வில் தோன்றி மறைந்த ரயில் சிநேகம் போன்ற நட்புகள் தவிர, மரம் போல் தோன்றிய நட்புகள் இலை போல் உதிர்ந்த போது, மனதில் ஏற்பட்ட "வலி" நீண்ட காலம் என் மனதை விட்டு அகலவில்லை. "எனக்கு மட்டும் ஏனிந்தக் கஷ்டம்?" என்ற கேள்வி என் ஒவ்வொரு கஷ்டத்திலும் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. பிரிக்கவே முடியாத தொப்புள் கொடி உறவே கேள்விக்குறி ஆனபோது, நான் அதுவரை வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொண்டதெல்லாம், என் சுகம், துக்கம், தாழ்வு மனப்பான்மை மற்றும் என் மனதின் வலிகள் உட்பட அனைத்தும், அர்த்தமற்றதாகத் தோன்றியது. நான் மீண்டும் புதிதாகப் பிறந்தது போல் பாவித்து, வாழ்க்கையைத் தேட ஆரம்பித்தேன். இந்தத் தேடல் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், அவரவர் மனநிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து, வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தொடங்கும் என்ற உண்மை எனக்குப் புரியத் தொடங்கியது!

என் இந்தத் தேடலில் பகவத் கீதை என் குருவானது. சிவவாக்கியரும், பட்டினத்தாரும், பாரதியாரும் எனக்கு பிடித்தவர்களானார்கள். ஜென் கதைகளும், ஓவியமும், புகைப்படமும் என் மன அமைதிக்கு உதவும் கருவிகளாயின. என் மேற்படிப்பு எனக்கு பிளேட்டோவையும், பெஞ்சமின் பிரான்க்ளினையும், எமர்சனையும், தொரோவையும் அறிமுகப்படுத்தியது. எனக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவு பிடிபட்டதோ இல்லையோ, என் மனது சமன்படுத்தப்பட்டது போன்ற உணர்வு எனக்குத் தோன்றியது. என் தேடலையும், அதில் நான் கற்றதையும், என் வலைப்பூவில் பதிய என்னுள்ளே உருவான உந்துதலே இந்தக் கட்டுரை.

நம் அனைவருக்கும் படிப்பதில் ஒரு பிரச்சினை. நாம் ஒன்றைப் படித்துப் புரிந்து கொண்டது, எழுதியவனின் எண்ண வெளிப்பாடோடு ஒத்துப் போவதில்லை. எழுதுபவனாலும் தான் நினைப்பதை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வர இயலுவதுமில்லை. எனவே, இந்தக் கட்டுரையைப் பல பிரிவுகளாகப் பிரித்து, என்னால் முடிந்தவரை விளக்கமாக எழுத முயன்றிருக்கிறேன்.


பிரபஞ்சத்தைப் பற்றி ...

நாம் அனைவரும் இரவு நேர வானத்தைப் பார்த்திருப்போம். அதுவும் அமாவாசை இரவில், மேகங்கள் ஏதும் சூழாமலிருக்கும் வானத்தை யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. பல நட்சத்திரங்கள் வைரங்கள் போல் ஜொலிப்பது மிக அழகாக இருக்கும். பாரதி கூட "பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம், நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!" என்று இதைப் பற்றி வர்ணித்திருக்கிறார். ஆனால், விஞ்ஞானம் நட்சத்திரத்தை சூரியன் போல் எரிந்து கொண்டிருக்கும், நெருப்புக் கோளம் என்று சொல்கிறது. இந்த நெருப்புக் கோளங்களைச் சுற்றி பூமி போன்ற கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட எரியும் கோள்களான நட்சத்திரங்கள் எத்தனை என்று யாருக்கும் தெரியாது. கண்ணுக்குத் தெரிபவையின் கணக்கே தெரியாத பொழுது, கண்ணுக்கு தெரியாதவை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த புரிதலோடு, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி சற்றே கற்பனைப் பண்ணிப் பார்க்கலாம். நம் அறிவிற்கு இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகள் தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அதை அளவிட எத்தனை ஒளி வருடங்கள் என்பதைச் சொல்ல நம்மிடம் அவ்வளவு பெரிய எண் தான் உண்டா? இப்படி ஆதியும் அந்தமும் தெரியாத இந்தப் பிரபஞ்சத்தில், பூமி என்பது ஒரு புள்ளி அளவு கூடக் கிடையாது. இப்படிப் பட்ட சாதாரண மண் உருண்டையில் வாழும் ஜீவராசிகளில் மனித இனமும் ஒன்று. இந்த மண்ணில் தோன்றி அழிந்த மனித இனத்தின் ஆதி கூட நமக்கு சரியாகத் தெரியாது. நமக்குக் கிடைத்த சில பல சான்றுகளையும் தடயங்களையும் வைத்து அறிவியலில் நம் ஆதியை இன்னும் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

மனிதக் கண்டுபிடிப்புகளெல்லாம் பல கோடி நூற்றாண்டுகளாக, இந்தப் பிரபஞ்சத்தின் அங்கங்களே. கண்டுபிடிக்கும் வரை அது புதிர் அல்லது நம்புவதற்கு அரியது. கண்டுபிடித்தபின் அது மனித அறிவிற்குட்பட்டு, அதன் பின் அழிவிற்கும் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆனால், இந்தப் பிரபஞ்ச விதிகளுக்கு மாறுபட்ட எதுவும் மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவோ உருவாக்கப்படவோ இல்லை.

பிரபஞ்ச விதி என்ற வார்த்தை விளக்கப்படாமல், அதைப் பற்றிப் பேசுவது குழப்பமேற்படுத்தும். உதாரணமாக, ஒளியை எடுத்துக்கொள்வோம். ஒளி என்பது பயணம் செய்யாவிடில் நமக்கு நட்சத்திரங்கள் தெரியாது; சூரியனும் சந்திரனும் தெரியாது; பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் தொழில் நுட்பம் கிடையாது. ஒளி நீண்ட தூரம் பயணம் செய்யும் என்பது அறிவியலின் உதவியால் நமக்குத் தெரியும். ஆனால், ஒளியென்று ஒன்று ஏனிந்தப் பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும்? எங்கோ சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளி, சந்திரன் மேல் பட்டு, அதன் பிரதிபலிப்பு கூட நமக்கு நிலா வெளிச்சமாக உதவுகிறது. நிலா வெளிச்சமானாலும்,மெழுகுவர்த்தி வெளிச்சமானாலும், சூரிய வெளிச்சமானாலும், அது நம்மைச் சுற்றியுள்ள மற்ற பொருள்களின் மீது பட்டு அதன் பிரதிபலிப்புதான் நம் கண்களுக்குள் பிம்பமாக உள்ளே போகிறது. நம்மைச் சுற்றி உள்ளவற்றை நாம் பார்த்து உணர வெளிச்சம் தேவை. இப்படி வெளிச்சம் பயணம் செய்யாவிட்டால் நாம் எதனையும் பார்க்க இயலாது. எனவே, நாம் பார்த்து உணர ஒளி என்ற ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தேயாகவேண்டும். வெளிச்சத்தின் இயல்பு பயணம் செய்வது. அதன் வேதியல் தன்மை நிறப்பிரிகை. இப்படியே நமக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் அலசிக் கொண்டே போனால், அவை அனைத்துக்கும் ஒரு தனித் தன்மை இருப்பது புரியும். ஒன்றின் தன்மை மற்றதை விட மாறுபடுகிறது.

நீருக்கு இருக்கும் அதே தனித் தன்மை காற்றுக்கு ஏன் இருப்பதில்லை? இந்தக் கேள்வி சற்றே முட்டாள்தனமாக இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் அது அர்த்தமுள்ளதாகவே தோன்றும். நீர் என்பது இரண்டு விதமான வாயுக்களின் சங்கமம் என்று நாம் படித்திருக்கிறோம். அதாவது, ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் கலந்ததே நீர். இப்படி, இரண்டு வாயுக்களினால் ஆன நீருக்கு அந்த வாயுக்களின் தன்மையோ அல்லது அந்த வாயுக்களுக்கு நீரின் தன்மையோ இருப்பதில்லை. அப்படி இருக்குமானால் நாம் நீருக்குள்ளும் சுவாசிக்க முடியும். இப்படி ஒவ்வொன்றிற்கும் இருக்கும் தன்மை, அதன் இயக்கம், ஒன்று மற்றதாக மாறும் பொழுது மாறுபடும் இயக்கம் மற்றும் மாறுபடும் அதன் தன்மை என அனைத்தையும் பிரபஞ்ச விதி என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம்.

நாமறிந்த அனைத்திலும் அணு இருப்பதும் அதனுள் கரு, அதாவது நியுகிளியஸ், இருப்பதும் நமக்குத் தெரியும். இருப்பினும் இந்த அணுக் கூட்டமைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். இந்தக் கூட்டமைப்பின் வெளிப்பாடுதான் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போன்றவை. இந்த அறிவைக் கொண்டு நாம் ஒரு பொருளைத் தயாரிக்கும் பொழுது அது ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருளாக உருவானால், பிரபஞ்ச விதி என்று இருப்பதாக நாம் ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு பொருளோ, செயலோ, தன்மையோ, இப்படித்தான் இருக்கும் என்ற நம் புரிதலுக்குக் காரணம், அனைத்தும் பிரபஞ்ச விதிக்கு உட்பட்டதால் தான்.

இதுமட்டுமன்றி காந்தப்புலம், புவியீர்ப்பு விசை, புலனுணர்வுகள், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் என அனைத்தையும் பிரபஞ்ச விதிக்குட்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்ச விதிக்கு மாறுபடவேண்டும் எனில், ஆட்டின் வயிற்றில் யானை பிறக்க வேண்டும் அல்லது இப்பூமியில் கிடைக்காத ஒன்றைக் கொண்டு புதிதான ஒன்றை மனிதன் உருவாக்கவேண்டும். குளோனிங் என்பது கூட பிரபஞ்ச விதிகளுக்கு மாறுபட்டது அல்ல. குளோனிங் பற்றியும் பின்வரும் பகுதிகளில் அலசலாம். குளோனிங்கில் உருவான உயிரினத்தைச் சுமக்க, அந்த இனத் தாயின் தயவு தேவைப்படுகிறது. ஒருவேளை குளோனிங் மூலமாகப் பிறக்கும் உயிரினம் மனிதன் தயாரித்த இயந்திரத்திலிருந்து பிறந்தால், அது பிரபஞ்ச முறைக்கு மாறுபட்டது. அதைவிட தான் நினைத்தபடி டி.என்.எ எனப்படும் டைஆக்சிரிபோ நியூக்கிளியஸ் ஆசிட் என்ற செல்லின் கருவிலிருக்கும் அமிலத்தில் உள்ள உடற்கூறு பற்றிய புரோக்ராம்மை மனிதனால் மாற்ற முடிகிறதென்றால் அதுவும் மாறுபட்டதே. அதையும் விட ஒரு படி மேலே போய் மனிதனால் எந்த உயிரினத்தின் உதவியில்லாமல் ஒரு செல்-ஐத் தயாரித்து அதை தான் நினைத்த ஒரு உயிரினமாகத் தோற்றுவிக்க முடியுமெனில், அது சத்தியமாக பிரபஞ்ச விதிக்கு உட்பட்டதே அல்ல.

இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில், அனைத்தும் பிரபஞ்ச விதிக்குட்பட்டு சீராகவே நடந்து கொண்டிருக்கிறது. நான் "சீராக" என்று சொல்வதை, மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். சுனாமியின் தாக்குதல், பூகம்பத்தின் அழிவு, மனித உயிர்கொல்லி வைரஸ், பல மனித உயிர்களை பலி வாங்கும் யுத்தம் என்பதெல்லாம் சீரானதா என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இருக்காது. இவையெல்லாம் மனிதனுக்குத்தான் கொடுமையானது. பிரபஞ்சத்திற்கல்ல! உயிரினங்கள் பிறந்து மடிவது பிரபஞ்சத்தில் இயற்கையான விஷயம். ஒரு உயிர் அழியும் அந்தக் கணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. அதேபோல், ஒரு உயிர் ஜனிக்கும் போது பல உயிர்கள் மரணிக்கின்றன. உயிர்கள் அழிவதன் காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு உயிரினம் மற்றவற்றைக் கொன்று தன் பசியாறுவதும் ஒரு உயிர் அழிவதின் காரணங்களில் ஒன்று. காட்டிலோ கடலிலோ வாழும் அசைவ உயிரினங்கள் மற்றவற்றைக் கொல்வதை மட்டும் நான் சொல்லவில்லை. மனித இனம் என்ற இப்பூமியில் வாழும் ஒரு உயிரினத்தின் பசிக்காகவும் ருசிக்காவும் எத்தனை எத்தனை கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும், மற்ற கடல் வாழ், தரை வாழ் உயிரினங்களும் தன் உயிரை இழக்கின்றன? மனிதனின் சுக வாழ்விற்காக எத்தனை எத்தனை கொசுக்களும், மூட்டைப்பூச்சிகளும், சிலந்திகளும், கரையான்களும், விட்டில் பூச்சிகளும், ஈக்களும் உயிர்விடுகின்றன? பிரபஞ்சத்தின் பார்வையில் ஒன்று இவையெல்லாமே கொடுமையாக இருக்க வேண்டும் அல்லது இயற்கையின் இயல்பு என்றிருக்க வேண்டும். மனிதனின் நல்லது கெட்டதுகள் பிரபஞ்சத்திற்கும் அப்படியே இருக்க வேண்டுமென்பதில்லை. இரண்டு மனிதர்களிடையே கூட நல்லது கெட்டது என்பது அப்படியே இருப்பதில்லை. எனக்கு நல்லது என்று படுவது, மற்றவருக்கும் நல்லதாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை. எனவே, மனிதனுக்குக் கொடுமையானது, பிரபஞ்ச இயக்கத்தில் இயல்பான ஒன்றாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கமும் சீராகவே இருப்பதை உணரலாம்! அதாவது, மனித மனம் உணரும் நல்லதும் கெட்டதும் இயல்பான விஷயங்களும் பிரபஞ்சத்தின் சீரான இயக்கமே!

மனித இனம் என்பது, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துகளான பூமி என்ற மண் உருண்டையின் ஒரு அங்கம்! அவ்வளவுதான்! ஒரு உயிர், அது மனிதனோ மற்றதோ, தோன்றி மறைவது என்பது பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மிகச் சாதாரண விஷயம். ஆனால், ஒரு மனிதனின் தோற்றமும் மறைவும் இன்னொரு மனிதனுக்கு சந்தோஷமாகவோ, துக்கமாகவோ, அல்லது எந்த உணர்ச்சியையும் தூண்டாத ஒரு நிகழ்வாகவோ ஆவது அந்த மனிதனின் மனநிலையையும் அந்த நிகழ்வுடன் உண்டான தொடர்பையும் பொறுத்ததே! ஆனால், அந்த உணர்ச்சிகள் கூட நிலையற்றதே! ஒரு தாய்க்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் வரை இருக்கும் கவலை, அது கிடைத்தவுடன் மறைகிறது. ஆனால், குழந்தைப் பிறந்ததில் சந்தோஷமுற்ற தாய்க்கு, அந்தக் குழந்தை வளரும் போது செய்யும் குறும்பைச் சமாளிக்க முடியாமல் திணறும் போது சந்தோஷம் போய் "இந்த சனியன் ஏன்தான் பிறந்து தொலைத்ததோ?" என்று பேசுமளவு கோபம் வருகிறது. எனவே மனித சுகதுக்கத்தும் ஒரு உயிரின் தோற்ற மறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனிதனின் சுகதுக்கம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்பதே நிதர்சனம்.

மனிதன் மட்டுமில்லாது அனைத்து சக உயிரினங்களும் தோன்றுவதும் இந்த மண்ணில் தான், மறைவதும் இந்த மண்ணில் தான். வாழும் காலம் மட்டும்தான் மாறுபடுகிறதே தவிர, தோன்றிய ஒன்று அழிவது என்பது உறுதி. இப்படித் தோன்றி அழிவது உயிருள்ளவையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பூகம்பம் வந்தால், அங்கே உயிருள்ளவை உயிரற்றவை என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்தும் மண்ணோடு மண்ணாகின்றன. எனவே இந்த மண்ணில் உயிருள்ளவை உயிரற்றவை என்ற அனைத்தும் சரிநிகர் சமானமானவையே! இப்படிப் பார்த்தால் கல், மண், மணல், கரி, சுண்ணாம்பு, இரும்பு, பித்தளை, தங்கம், முத்து, வைரம், வைடூரியம், மரம், செடி, கொடி, புல், பூடு, புழு, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், இறைச்சி, மனிதன் என அனைத்தும் எந்த வித உயர்வு தாழ்வுமற்ற பூமியின் அங்கங்களே! இவை அனைத்தும் மனிதனின் பார்வையில் உயர்வாகவோ, தாழ்வாகவோ இருக்கலாம். ஆனால், எப்படி பல வகையான பூச்சிகள் இருந்தாலும், மனிதனுக்கு அவையனைத்தும் எந்த வேறுபாடும் இல்லாமல் "பூச்சி" என்று மட்டும் படுகிறதோ, அதுமாதிரி பிரபஞ்சப் பார்வையில் இவை அனைத்தும் ஒன்றே. உயிருள்ளவை உயிரற்றவை என்ற வித்தியாசமும் அதற்கில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உடலின் அளவும், அறிவு வளர்ச்சியும், அதன் தனிப்பட்டத் திறமைகளும், சக்திகளும் மாறுபடுகிறதே தவிர, எதுவும் எதை விடவும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.

தொடரும் ...