Saturday, July 31, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 4

ஆக்கமும் அழிவும்

நம் உடம்பு மட்டும் அதிசயம் அல்ல! வெவ்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் அதிசயங்களே! நாம் இவற்றைப் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், இயற்கையின் ஆக்கத்தை விடுத்து மனித ஆக்கத்தை உலக அதிசயங்களென ரசிக்கிறோம்!

இயற்கையில் ஆக்கம் மட்டுமில்லாமல் அழிவும் எந்தத் தடையுமின்றி நடக்கிறது. தோன்றியவை மறைய வேண்டுமென்பது இயற்கையின் விதி! இந்தக் கணத்தில் பல சிறகுகள் உதிர்ந்து பல தளிர்கள் துளிர்க்கின்றன; பல உயிர்கள் பிரிந்து பல உயிர்கள் பிறக்கின்றன. இயற்கையின் இந்த பிரமாண்ட மறுசுழற்சி (recycling) மனித சக்தியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று!

மனிதப் படைப்புகளைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம், நம் செயற்கைத் தயாரிப்புகளின் மறுசுழற்சியைத் திட்டமிட மறந்ததனால் இன்று சோடா கேன்களும், பிளாஸ்டிக்குகளும், சிலிகான் உதிரிகளும் எப்படி அழிக்கப்படவேண்டும் என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையின் ஆக்கமும் அழிவும் கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதால் தான், இன்று நாம் வாழ இந்தப் பூமியில் இடமிருக்கிறது! இதுவே இயற்கையின் சீரான இயக்கத்தின் சான்று! பிறப்பு அதிகமானால், சுனாமி போன்ற அழிவு சக்திகளும் அதிகமாகின்றன. மனிதனுக்கு சுனாமி துக்கத்தின் அடையாளம்; ஆனால், இயற்கைக்கு அது சீரான இயக்கத்திற்குத் தேவையான ஒரு ஆற்றல்! அவ்வளவுதான்!

மனம் எனும் புதிர்

இதுவரை சொன்னது போல் மனித உடம்பையும் இயற்கையின் இதர அம்சங்களையும் அதிசயமாய் பார்க்கக் கற்றுக் கொண்ட எனக்கு, சிவனடியார்களான சித்தர்களின் பாட்டுக்கள் உடம்பைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் புகட்டின. பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனேஇதன் அர்த்தம்: "என் மனித உடம்பாகிய இந்த ஊற்றைச் சரீரத்தை (துர்நாற்றமடிக்கும் உடல்), ஆபாசம் நிறைந்த கொட்டிலைப் (கொட்டில் என்றால் தொழுவம், அல்லது கொட்டகை என்று பொருள்) போன்ற உடலை, சதை (ஊன்) பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் நான் சோறிடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

இதே சாயலில் பட்டினத்தாரின் இன்னொரு பாடல்:

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே.

இதன் அர்த்தம்: "துர்நாற்றமடிக்கும் என் இந்த உடலை, இறந்தபின்பு சுடுகாட்டிற்கு அருகில் வாழும் நரிகளுக்கு ஒரு மூட்டை உணவாகப் போகப் போகிற இந்த உடம்பை, நான் தினமும் சோறும் கறியும் (மரக்கறியோ அல்லது மாமிசக் கறியோ) நிரப்பிய பாத்திரமாகிய என் உடம்பை சிற்றின்பத்தில் விழாமல் அருள் செய்வாய், இறைவா! காஞ்சியில் உறையும் ஏகாம்பரேஸ்வரா!"

[குறிப்பு: நாற்றம் என்பதற்கு தூய தமிழில் வாசனை என்று பொருள். "கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ ..." என்ற ஆண்டாளின் பாடலில், வாசனை என்று பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வழக்குத் தமிழில் நாற்றம் என்பதை துர்நாற்றத்தைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம். இங்கும் அது துர்நாற்றம் என்றே பொருள்படுகிறது.]

நம் மனதின் உணர்வுகளை (emotions or feelings) விடுத்து இந்த வரிகளை சிலமுறை படித்துப் பாருங்கள். நம் உடம்பு நாறும் உடல்தான் என்பதில் சந்தேகமென்ன? வியர்வை நாற்றம்; சிக்குப் பிடித்த தலை நாற்றம்; மூக்கில் ஒழுகும் சளி நாற்றம்; வாய் நாற்றம்; ஊறும் எச்சில் நாற்றம்; ருசித்து உண்ட அறுசுவை உணவு தொண்டையைத் தாண்டி உள்ளே போய் வெளிவந்தால் நாற்றம்; மலம் நாற்றம்; புண்ணில் பெருகும் சீழ் நாற்றம்; உயிர் பிரிந்த பின்பு சில மணி நேரத்தில் மொத்த உடம்பே நாற்றம்! நாற்றத்தை வெறுக்கும் நமக்கு, நம் உடம்பிலேயே பல நாற்றங்கள் இருந்தும் நம்மால் நம் உடம்பை வெறுக்கமுடியாதிருக்கும் விந்தையைத்தான் இந்தப் பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்படித் தெளிவில்லாமல் வெறுக்க வேண்டியதை விரும்பியும், விரும்ப வேண்டியதை வெறுத்தும், ஏன் பிறந்தோம் ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமலும் புரியாமலும், உறவுகளுக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் மூழ்கித் தத்தளிக்கும் மனம் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இதுவரை என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த அனுபவங்களின் மூலம் நான் புரிந்து கொண்ட மனம் பற்றிய அதிசயங்களை இனி பார்க்கலாம்.

தொடரும் ...

2 comments:

Gokula Krishnan said...

Its depth..

Gokula Krishnan said...
This comment has been removed by the author.