Sunday, June 20, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 3

உடம்பு என்ற அதிசயம் ....

பொதுவாகவே குழந்தைப் பிறப்பைப் பற்றி மனிதர்கள் இன, மொழி, நிற வேறுபாடில்லாமல் சொல்வது, "இறைவன் கொடுத்த வரம்!". இதை சில நாத்திக நண்பர்கள் இறைவன் கொடுப்பதென்றால் ஆணும் பெண்ணும் எதற்கு என்று கிண்டல் செய்வதைக் கேட்டிருக்கிறேன். முதலில் இந்தக் கேள்விக்கான பதிலை அலசிவிட்டு பின்பு உடம்பைப் பற்றி பேசலாம்.

குழந்தைப் பிறப்பிற்கு ஆணும் பெண்ணும் கருவிகள்தான் என்று பார்த்தோம். பெண்களுக்கு மாதவிடாய் முடிவடைந்து பத்துப் பதினைந்து தினங்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடையும். அந்தச் சமயத்தில், குழந்தை வேண்டும் பெற்றோரை மருத்துவர்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒருமுறை கலவியில் ஈடுபடச் சொல்கின்றனர். ஏனெனில், இயற்கையில் ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து (fusion) கரு உருவாவது உண்மை என்றாலும், அது நடந்தேற மருத்துவ ரீதியாக பல கஷ்டங்கள் உள்ளன. அவை இங்கு முக்கியமல்ல. ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் இணைய வைப்பதே (fusion) மனிதன் கையில் இல்லை என்பதுதான் இங்கு நான் சொல்லவருவது. டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்லக் கூடிய தொழில் நுட்பத்திலும் இதுவே உண்மை. கருத்தரித்த பின்பு குழந்தை வளர்ச்சியை நம்மால் சோதனை செய்து அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியுமே தவிர, அது இப்படித்தான் வளர வேண்டும் என்று நம்மால் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது. கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வருவதிலும் மருத்துவ ரீதியாகப் பல சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

இதையெல்லாம் மனதில் கொண்டு யோசித்தால் சில விஷயங்கள் நமக்குப் புரியும். குழந்தை உருவாக ஆணும் பெண்ணும் இணைவது மட்டும்தான் மனிதச் செயல். மனிதன் தன் குழந்தையின் உருவத்தை சிற்பி போலச் செதுக்குவதில்லை. அதன் அழகை ஓவியன் போல வண்ணம் குழைத்துத் தீட்டுவதில்லை. தன் குழந்தைக்குக் கை, கால், வாய், மூக்கு, கண் என்று ஒவ்வொரு புற உறுப்பும் இவ்வாறுதான் வேலை செய்யவேண்டும் என்று மனிதனால் தன் குழந்தையை டிசைன் செய்ய முடியாது. குழந்தை பிறந்தபின்தான் அதனால் பார்க்க முடிகிறதா, கேட்க முடிகிறதா என்று மருத்துவர்கள் முதலில் சோதனை செய்து உறுதிப் படுத்திக் கொள்கின்றனர். இப்படி நம்மால் செய்ய முடியாத ஒன்றை நாம்தான் செய்கிறோம் என்று வெட்டி இறுமாப்புடன் சொல்வதுதான் "குழந்தை பிறப்பு இறைவன் கொடுப்பதென்றால் ஆணும் பெண்ணும் எதற்கு?" என்ற கேள்வி. இதை இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், சிற்பி வடிக்கும் சிலையே தன்னால் தான் உருவானது என்ற உளியின் இறுமாப்பு போன்றதுதான் இந்தக் கேள்வி! இறைவன் கொடுக்கவில்லை என்பதை இந்தக் கேள்வி மூலம் அவர்கள் நிரூபிக்கவில்லை. அதே சமயம், குழந்தைப் பிறப்பு என்பது இறைவன்தான் கொடுத்தது என்பதும் நிரூபிக்கப்படாததே. குழந்தைப் பிறப்பு என்னும் புனிதம் மனிதன் கையில் இல்லை என்பதே நிதர்சனம்!

இனி உடம்பு என்ற சதைப் பிண்டத்தாலான அதிசய இயந்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். வேதியல் தனிம அட்டவணையில் மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏறத்தாழ நூற்றியிருபது தனிமங்கள் பட்டியல் இடப்பட்டிருக்கும். அதில் ஒரு சிலவற்றைத் தவிர மீதி அனைத்தும் இயற்கையிலேயே கிடைப்பவை. இவ்வாறு, இயற்கையில் கிடைக்கும் தனிமங்களால் ஆனதுதான் நம் உடம்பு. இது எலும்பு, சதை, நரம்பு, ரத்தம் போன்ற சமாச்சாரங்களை உள்ளடக்கித் தோல் போர்த்திய அதிசயம் என்பது நமக்குத் தெரியும். எனவே, நான் அதைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. என் பார்வை நம் உடம்பின் டிசைன் மற்றும் கட்டமைப்பின் அதிசயம் பற்றித்தான்.

நம் உடம்பின் இயக்கத்திற்குத் தலைமை மூளை என்னும் அதிசயச் சதைத் தொகுப்பு. மூளையையும் உடம்பின் இதர பிற உறுப்புகளையும் இணைப்பது நரம்புகள். இந்த நரம்புகள் அனைத்தும் ஒருசேர நமது தண்டுவடத்தின் ஊடே ஒருங்கிணைக்கப்பட்டு மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, மூளையினால் நம் உடம்பின் அனைத்து உறுப்புகளிலிருந்து வரும் உணர்வுகளை (input) உள்வாங்கிக் கொள்ளவும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆணையையும் கொடுக்க முடிகிறது. மூளை என்ற சதைப் பிண்டம் இப்படிச் செயல்படுவதே ஒரு பேரதிசயம்!

உடம்பின் நுண்ணிய பகுதி செல் என்றும் அதன் நுண்ணிய பகுதி அணு என்றும் பார்த்தோம். அணுவில் எலக்ட்ரான் எனப்படும் சமாச்சாரம் இருப்பதால், நமது அனைத்து உறுப்புகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து அனைத்து உறுப்புகளுக்கும் தகவல் தொடர்பை எலக்ரான்கள் மின்சார வடிவில் எடுத்துச் செல்கின்றன. இங்கே கொஞ்சம் கொசுறான ஒரு செய்தியைச் சொல்லவேண்டும். பூமியில் உள்ள பொருட்களில் மின்கடத்தி, மின்கடத்தாப் பொருள்கள் என இருவகை உண்டு. அணுவின் கருவைச் (nucleus) சுற்றி எலக்ட்ரான்கள் ஒன்றுக்குமேற்பட்ட பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும். இதில் நியூக்ளியசுக்கு அருகிலிருக்கும் எலக்ட்ரான்கள் மீது நியூக்ளியசின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதேபோல், நியூக்கிளியசிலிருந்து தூரத்திலிருக்கும் (outer-most) எலெக்ட்ரான்கள் மீது இவ்விசை குறைவாக இருக்கும். இந்த எலக்ட்ரான்கள் தான் ஒரு அணுவிலிருந்து மற்ற அணுவுக்குத் தாவி மின்னியக்கத்தை ஏற்படுத்துபவை. இந்த மின்னியக்கமே மின்சாரம் எனப்படுகிறது. சில பொருட்களில் நியூக்ளியசை விட்டுத் தூரத்தள்ளியிருக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மிக அதிகமிருக்கும்; சிலவற்றில் இவை மிகக்குறைவாக இருக்கும். அதிகமிருந்தால், எலக்ட்ரான்கள் ஒரு அணுவிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவது எளிது. இத்தகைய பொருட்கள் மின்கடத்திகள். இந்த எண்ணிக்கை குறைவாய் இருந்தால், அவை மின்கடத்தாப் பொருட்கள். நம் உடம்பு மின்கடத்தி. எனவேதான் நமக்கு ஷாக் அடிக்கிறது. குறைந்த வோல்டஜை நம் உடம்பு தாங்கிக் கொள்ளும்; ஆனால், 220 வோல்ட்ஸ் நமக்கு மிக அதிகம்! அதுமட்டுமில்லாமல், ஆம்பியர் என்ற அளவீட்டில் சொல்லப்படும் மின்சாரத்தின் அளவும் மிக முக்கியம். நம் உடம்பில் கடத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமானால், நம் உடம்பு எரிந்து சாம்பலாகிவிடும். நம் வீட்டில் மின்சார வசதிக்காக பயன்படுத்தப்படும் தாமிரக் கம்பிகளில் கூட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து வெவ்வேறு விதமான கம்பிகளை பன்படுத்துகிறார்கள்.

கம்ப்யூட்டரில் கூட தகவல் தொடர்பு மின்சாரத்தின் மூலம் தான் நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். கம்ப்யூட்டரில் இதற்கு பைனரி (binary) எனப்படும் கணிதமுறைப் பயன்படுத்தப்படுகிறது. இதை டிஜிட்டல் கம்ப்யூட்டிங் என்றும் கூறுவார். சயன்ஸ் டெய்லி (sciencedaily.com) எனப்படும் இணையதள செய்தித்தாளில் மூளை அனலாக் (analog), டிஜிட்டல் (digital) என இரண்டு வகை செய்தித் தொடர்பு முறைகளையும் பயன்படுத்துகிறது என்று படித்திருக்கிறேன் (http://www.sciencedaily.com/releases/2006/04/060412223937.htm). ஆனால், நம் மூளையிலிருந்து உறுப்புகளுக்குச் செல்லும் தகவல் தொடர்பின் சூட்சமத்தை மனிதன் இன்னும் அறிந்தபாடில்லை.

மேலும், மின்சாரம் என்பதும் அதை வயர்களின் மூலம் கடத்த முடியும் என்பதும் மனிதனால் சில நூறு வருடங்களுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இந்தப் பூமியில் தோன்றி மடியும் மனிதனின் உடம்பிலும் செய்தித் தொடர்பு மின்சாரத்தால் தான் நடக்கிறது என்பதே மிக அதிசயம்! அதுமட்டுமில்லாமல், நரம்புகள் சீராக தண்டுவடத்தில் நுழைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக மூளையுடன் இணைந்திருப்பதைப் பார்க்கும் பொழுது மனித உடம்பின் நுட்பம், இன்றைய நெட்வொர்க் தொழில் நுட்பத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடுகிறது.

நுட்பம் மட்டுமில்லாமல், மனித உடம்பின் டிசைனில் efficiency (இதன் தமிழாக்கம் திறன்கெழு என்று ta.wikipedia.org-ல் எழுதப்பட்டிருக்கிறது) என்பதற்கும் பஞ்சமே இல்லை. சுவாசிக்கும் மூக்கை மோப்பத்திற்கும், ருசிமொட்டுகள் நிறைந்த நாக்கை பேச்சின் அதிர்வுகளுக்கும், கழிவு வெளியேறும் உறுப்புகளை மற்ற உறுப்புகளைவிட கேவலமானது என்று ஆக்காமல் மனிதனுக்குப் புனிதமான பிறப்பு என்னும் செயலின் மூலத்திற்கும் நம் உடம்பில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். மேலும், தொடுதிரை (touch screen) என்னும் ஒரு கருவியை கடந்த நாற்பது அல்லது ஐம்பது வருடத்திற்குள்தான் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். இதன் பயன்பாட்டை இந்நாளில் iPhone போன்ற கருவிகளில் காணமுடியும். ஆனால், காலகாலமாக மனிதனின் உடம்பை போர்த்தியிருப்பதற்காக மட்டுமில்லாமல் அதை எங்கு தொட்டாலும் அந்த உணரும் நம் தோல் என்ற நுட்பம் மனிதக் கண்டுபிடிப்பான தொடுதிரையையும் மிஞ்சியது. தொடுதிரைக்குத் தொடு உணர்ச்சி மட்டும்தான் உண்டு; ஆனால், நம் தோலுக்கு தட்பவெப்பத்தை அறியும் குணமும் உண்டு. இந்தவகையில், நம் தோலின் நுட்பம் தொடுதிரையைக் காட்டிலும் மிக அதிகமானது.

மனிதன் தயாரிக்கும் இயந்திரங்கள் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்வதில்லை. சில இயந்திரங்களில் மனிதன் சுயமாகத் தன்னைச் சரிசெய்துகொள்ளும் நுட்பத்தை படைத்திருக்கிறான். ஆனால், அதுவும், ஓரளவுக்குத்தான். ஆனால், ஜனனத்தில் இருந்து மரணம் வரை மனிதன் என்னும் சதையாலான இயந்திரம் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்கிறது. இது கரு தோன்றிய தினத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது.

கருப்பையினுள் இருக்கும்போது கருவுக்குத் தேவையான உணவும் கதகதப்பான சீதோஷ்ணமும் தாயிடமிருந்தே கிடைத்து விடுகிறது. குழந்தை ஜனித்தவுடன் அதன் பசியாறத் தாயின் தனத்தில் சுரக்கும் கொலோஸ்ட்ரம் (Colostrum) என்ற திரவம் குழந்தையின் செரிமானத்திற்கு தகுந்ததாகவும் குழந்தையின் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டதாகவும் உள்ள அமிர்தம். அதன்பின் சுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட விலைமதிப்பில்லாத ஒன்று. இப்படித் தன் குழந்தைக்குத் தேவையான ஒவ்வொன்றையும் தானே தயாரித்துக் கொள்கிறது தாயின் உடம்பு! கருப்பையில் இருக்கும் வரை எல்லாம் கேட்காமலேயே கிடைத்து விடும். ஜனித்தபின் கேட்டுப் பெற வேண்டும். இப்படித் தன்னைத் தானே வளர்த்திக் கொள்ளும் விலை மதிப்பே இல்லாத சதை-எலும்பாலான இயந்திரம்தான் மனித உடம்பு.

No comments: