Tuesday, March 2, 2010

ஊன், உயிர், உலகம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தான் துன்பப்படும் பொழுது நினைக்கும் கேள்வி "எனக்கு மட்டும் ஏனிந்தக் கஷ்டம்?". நான் மனிதன் என்று குறிப்பிடுவது ஆண், பெண், திருநங்கையர் என அனைவரையும் சேர்த்துதான். இந்தக் கேள்விக்கு எவரும் விதிவிலக்கல்ல. மனிதன் வாழ்க்கையைப் பற்றி தன் தேடலைத் துவங்க, இந்தக் கேள்விதான் அஸ்திவாரம்.

என் வாழ்விலும் இதுவரை நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேர்ந்தது. நான் ஏற்ற தாழ்வுகள் என்று சொல்வது, என் மனதில் ஏற்பட்டவையே. பத்தாவது முடித்தவுடன், மூன்று வருடம் மின்னணுப் பொறியியல் துறையில் டிப்ளோமா படித்துவிட்டு, அதன்பின் எங்கள் வீட்டுப் பொருளாதாரம் காரணமாக மேற்படிப்பு எனக்கு எட்டாக் கனியானதால், எனக்கு என் "குறைந்த அளவு" படிப்பைப் பற்றியத் தாழ்வு மனப்பான்மை என் மனதில் நெடுங்கலமாகக் குடிகொண்டிருந்தது. என் வாழ்வில் தோன்றி மறைந்த ரயில் சிநேகம் போன்ற நட்புகள் தவிர, மரம் போல் தோன்றிய நட்புகள் இலை போல் உதிர்ந்த போது, மனதில் ஏற்பட்ட "வலி" நீண்ட காலம் என் மனதை விட்டு அகலவில்லை. "எனக்கு மட்டும் ஏனிந்தக் கஷ்டம்?" என்ற கேள்வி என் ஒவ்வொரு கஷ்டத்திலும் தவிர்க்க முடியாததாகவே இருந்தது. பிரிக்கவே முடியாத தொப்புள் கொடி உறவே கேள்விக்குறி ஆனபோது, நான் அதுவரை வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொண்டதெல்லாம், என் சுகம், துக்கம், தாழ்வு மனப்பான்மை மற்றும் என் மனதின் வலிகள் உட்பட அனைத்தும், அர்த்தமற்றதாகத் தோன்றியது. நான் மீண்டும் புதிதாகப் பிறந்தது போல் பாவித்து, வாழ்க்கையைத் தேட ஆரம்பித்தேன். இந்தத் தேடல் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், அவரவர் மனநிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து, வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தொடங்கும் என்ற உண்மை எனக்குப் புரியத் தொடங்கியது!

என் இந்தத் தேடலில் பகவத் கீதை என் குருவானது. சிவவாக்கியரும், பட்டினத்தாரும், பாரதியாரும் எனக்கு பிடித்தவர்களானார்கள். ஜென் கதைகளும், ஓவியமும், புகைப்படமும் என் மன அமைதிக்கு உதவும் கருவிகளாயின. என் மேற்படிப்பு எனக்கு பிளேட்டோவையும், பெஞ்சமின் பிரான்க்ளினையும், எமர்சனையும், தொரோவையும் அறிமுகப்படுத்தியது. எனக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவு பிடிபட்டதோ இல்லையோ, என் மனது சமன்படுத்தப்பட்டது போன்ற உணர்வு எனக்குத் தோன்றியது. என் தேடலையும், அதில் நான் கற்றதையும், என் வலைப்பூவில் பதிய என்னுள்ளே உருவான உந்துதலே இந்தக் கட்டுரை.

நம் அனைவருக்கும் படிப்பதில் ஒரு பிரச்சினை. நாம் ஒன்றைப் படித்துப் புரிந்து கொண்டது, எழுதியவனின் எண்ண வெளிப்பாடோடு ஒத்துப் போவதில்லை. எழுதுபவனாலும் தான் நினைப்பதை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வர இயலுவதுமில்லை. எனவே, இந்தக் கட்டுரையைப் பல பிரிவுகளாகப் பிரித்து, என்னால் முடிந்தவரை விளக்கமாக எழுத முயன்றிருக்கிறேன்.


பிரபஞ்சத்தைப் பற்றி ...

நாம் அனைவரும் இரவு நேர வானத்தைப் பார்த்திருப்போம். அதுவும் அமாவாசை இரவில், மேகங்கள் ஏதும் சூழாமலிருக்கும் வானத்தை யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. பல நட்சத்திரங்கள் வைரங்கள் போல் ஜொலிப்பது மிக அழகாக இருக்கும். பாரதி கூட "பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம், நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!" என்று இதைப் பற்றி வர்ணித்திருக்கிறார். ஆனால், விஞ்ஞானம் நட்சத்திரத்தை சூரியன் போல் எரிந்து கொண்டிருக்கும், நெருப்புக் கோளம் என்று சொல்கிறது. இந்த நெருப்புக் கோளங்களைச் சுற்றி பூமி போன்ற கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட எரியும் கோள்களான நட்சத்திரங்கள் எத்தனை என்று யாருக்கும் தெரியாது. கண்ணுக்குத் தெரிபவையின் கணக்கே தெரியாத பொழுது, கண்ணுக்கு தெரியாதவை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த புரிதலோடு, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி சற்றே கற்பனைப் பண்ணிப் பார்க்கலாம். நம் அறிவிற்கு இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகள் தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அதை அளவிட எத்தனை ஒளி வருடங்கள் என்பதைச் சொல்ல நம்மிடம் அவ்வளவு பெரிய எண் தான் உண்டா? இப்படி ஆதியும் அந்தமும் தெரியாத இந்தப் பிரபஞ்சத்தில், பூமி என்பது ஒரு புள்ளி அளவு கூடக் கிடையாது. இப்படிப் பட்ட சாதாரண மண் உருண்டையில் வாழும் ஜீவராசிகளில் மனித இனமும் ஒன்று. இந்த மண்ணில் தோன்றி அழிந்த மனித இனத்தின் ஆதி கூட நமக்கு சரியாகத் தெரியாது. நமக்குக் கிடைத்த சில பல சான்றுகளையும் தடயங்களையும் வைத்து அறிவியலில் நம் ஆதியை இன்னும் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

மனிதக் கண்டுபிடிப்புகளெல்லாம் பல கோடி நூற்றாண்டுகளாக, இந்தப் பிரபஞ்சத்தின் அங்கங்களே. கண்டுபிடிக்கும் வரை அது புதிர் அல்லது நம்புவதற்கு அரியது. கண்டுபிடித்தபின் அது மனித அறிவிற்குட்பட்டு, அதன் பின் அழிவிற்கும் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆனால், இந்தப் பிரபஞ்ச விதிகளுக்கு மாறுபட்ட எதுவும் மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவோ உருவாக்கப்படவோ இல்லை.

பிரபஞ்ச விதி என்ற வார்த்தை விளக்கப்படாமல், அதைப் பற்றிப் பேசுவது குழப்பமேற்படுத்தும். உதாரணமாக, ஒளியை எடுத்துக்கொள்வோம். ஒளி என்பது பயணம் செய்யாவிடில் நமக்கு நட்சத்திரங்கள் தெரியாது; சூரியனும் சந்திரனும் தெரியாது; பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் தொழில் நுட்பம் கிடையாது. ஒளி நீண்ட தூரம் பயணம் செய்யும் என்பது அறிவியலின் உதவியால் நமக்குத் தெரியும். ஆனால், ஒளியென்று ஒன்று ஏனிந்தப் பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும்? எங்கோ சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளி, சந்திரன் மேல் பட்டு, அதன் பிரதிபலிப்பு கூட நமக்கு நிலா வெளிச்சமாக உதவுகிறது. நிலா வெளிச்சமானாலும்,மெழுகுவர்த்தி வெளிச்சமானாலும், சூரிய வெளிச்சமானாலும், அது நம்மைச் சுற்றியுள்ள மற்ற பொருள்களின் மீது பட்டு அதன் பிரதிபலிப்புதான் நம் கண்களுக்குள் பிம்பமாக உள்ளே போகிறது. நம்மைச் சுற்றி உள்ளவற்றை நாம் பார்த்து உணர வெளிச்சம் தேவை. இப்படி வெளிச்சம் பயணம் செய்யாவிட்டால் நாம் எதனையும் பார்க்க இயலாது. எனவே, நாம் பார்த்து உணர ஒளி என்ற ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தேயாகவேண்டும். வெளிச்சத்தின் இயல்பு பயணம் செய்வது. அதன் வேதியல் தன்மை நிறப்பிரிகை. இப்படியே நமக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் அலசிக் கொண்டே போனால், அவை அனைத்துக்கும் ஒரு தனித் தன்மை இருப்பது புரியும். ஒன்றின் தன்மை மற்றதை விட மாறுபடுகிறது.

நீருக்கு இருக்கும் அதே தனித் தன்மை காற்றுக்கு ஏன் இருப்பதில்லை? இந்தக் கேள்வி சற்றே முட்டாள்தனமாக இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் அது அர்த்தமுள்ளதாகவே தோன்றும். நீர் என்பது இரண்டு விதமான வாயுக்களின் சங்கமம் என்று நாம் படித்திருக்கிறோம். அதாவது, ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் கலந்ததே நீர். இப்படி, இரண்டு வாயுக்களினால் ஆன நீருக்கு அந்த வாயுக்களின் தன்மையோ அல்லது அந்த வாயுக்களுக்கு நீரின் தன்மையோ இருப்பதில்லை. அப்படி இருக்குமானால் நாம் நீருக்குள்ளும் சுவாசிக்க முடியும். இப்படி ஒவ்வொன்றிற்கும் இருக்கும் தன்மை, அதன் இயக்கம், ஒன்று மற்றதாக மாறும் பொழுது மாறுபடும் இயக்கம் மற்றும் மாறுபடும் அதன் தன்மை என அனைத்தையும் பிரபஞ்ச விதி என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம்.

நாமறிந்த அனைத்திலும் அணு இருப்பதும் அதனுள் கரு, அதாவது நியுகிளியஸ், இருப்பதும் நமக்குத் தெரியும். இருப்பினும் இந்த அணுக் கூட்டமைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். இந்தக் கூட்டமைப்பின் வெளிப்பாடுதான் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போன்றவை. இந்த அறிவைக் கொண்டு நாம் ஒரு பொருளைத் தயாரிக்கும் பொழுது அது ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பொருளாக உருவானால், பிரபஞ்ச விதி என்று இருப்பதாக நாம் ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு பொருளோ, செயலோ, தன்மையோ, இப்படித்தான் இருக்கும் என்ற நம் புரிதலுக்குக் காரணம், அனைத்தும் பிரபஞ்ச விதிக்கு உட்பட்டதால் தான்.

இதுமட்டுமன்றி காந்தப்புலம், புவியீர்ப்பு விசை, புலனுணர்வுகள், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் என அனைத்தையும் பிரபஞ்ச விதிக்குட்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்ச விதிக்கு மாறுபடவேண்டும் எனில், ஆட்டின் வயிற்றில் யானை பிறக்க வேண்டும் அல்லது இப்பூமியில் கிடைக்காத ஒன்றைக் கொண்டு புதிதான ஒன்றை மனிதன் உருவாக்கவேண்டும். குளோனிங் என்பது கூட பிரபஞ்ச விதிகளுக்கு மாறுபட்டது அல்ல. குளோனிங் பற்றியும் பின்வரும் பகுதிகளில் அலசலாம். குளோனிங்கில் உருவான உயிரினத்தைச் சுமக்க, அந்த இனத் தாயின் தயவு தேவைப்படுகிறது. ஒருவேளை குளோனிங் மூலமாகப் பிறக்கும் உயிரினம் மனிதன் தயாரித்த இயந்திரத்திலிருந்து பிறந்தால், அது பிரபஞ்ச முறைக்கு மாறுபட்டது. அதைவிட தான் நினைத்தபடி டி.என்.எ எனப்படும் டைஆக்சிரிபோ நியூக்கிளியஸ் ஆசிட் என்ற செல்லின் கருவிலிருக்கும் அமிலத்தில் உள்ள உடற்கூறு பற்றிய புரோக்ராம்மை மனிதனால் மாற்ற முடிகிறதென்றால் அதுவும் மாறுபட்டதே. அதையும் விட ஒரு படி மேலே போய் மனிதனால் எந்த உயிரினத்தின் உதவியில்லாமல் ஒரு செல்-ஐத் தயாரித்து அதை தான் நினைத்த ஒரு உயிரினமாகத் தோற்றுவிக்க முடியுமெனில், அது சத்தியமாக பிரபஞ்ச விதிக்கு உட்பட்டதே அல்ல.

இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில், அனைத்தும் பிரபஞ்ச விதிக்குட்பட்டு சீராகவே நடந்து கொண்டிருக்கிறது. நான் "சீராக" என்று சொல்வதை, மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். சுனாமியின் தாக்குதல், பூகம்பத்தின் அழிவு, மனித உயிர்கொல்லி வைரஸ், பல மனித உயிர்களை பலி வாங்கும் யுத்தம் என்பதெல்லாம் சீரானதா என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இருக்காது. இவையெல்லாம் மனிதனுக்குத்தான் கொடுமையானது. பிரபஞ்சத்திற்கல்ல! உயிரினங்கள் பிறந்து மடிவது பிரபஞ்சத்தில் இயற்கையான விஷயம். ஒரு உயிர் அழியும் அந்தக் கணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. அதேபோல், ஒரு உயிர் ஜனிக்கும் போது பல உயிர்கள் மரணிக்கின்றன. உயிர்கள் அழிவதன் காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு உயிரினம் மற்றவற்றைக் கொன்று தன் பசியாறுவதும் ஒரு உயிர் அழிவதின் காரணங்களில் ஒன்று. காட்டிலோ கடலிலோ வாழும் அசைவ உயிரினங்கள் மற்றவற்றைக் கொல்வதை மட்டும் நான் சொல்லவில்லை. மனித இனம் என்ற இப்பூமியில் வாழும் ஒரு உயிரினத்தின் பசிக்காகவும் ருசிக்காவும் எத்தனை எத்தனை கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும், மற்ற கடல் வாழ், தரை வாழ் உயிரினங்களும் தன் உயிரை இழக்கின்றன? மனிதனின் சுக வாழ்விற்காக எத்தனை எத்தனை கொசுக்களும், மூட்டைப்பூச்சிகளும், சிலந்திகளும், கரையான்களும், விட்டில் பூச்சிகளும், ஈக்களும் உயிர்விடுகின்றன? பிரபஞ்சத்தின் பார்வையில் ஒன்று இவையெல்லாமே கொடுமையாக இருக்க வேண்டும் அல்லது இயற்கையின் இயல்பு என்றிருக்க வேண்டும். மனிதனின் நல்லது கெட்டதுகள் பிரபஞ்சத்திற்கும் அப்படியே இருக்க வேண்டுமென்பதில்லை. இரண்டு மனிதர்களிடையே கூட நல்லது கெட்டது என்பது அப்படியே இருப்பதில்லை. எனக்கு நல்லது என்று படுவது, மற்றவருக்கும் நல்லதாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை. எனவே, மனிதனுக்குக் கொடுமையானது, பிரபஞ்ச இயக்கத்தில் இயல்பான ஒன்றாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கமும் சீராகவே இருப்பதை உணரலாம்! அதாவது, மனித மனம் உணரும் நல்லதும் கெட்டதும் இயல்பான விஷயங்களும் பிரபஞ்சத்தின் சீரான இயக்கமே!

மனித இனம் என்பது, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துகளான பூமி என்ற மண் உருண்டையின் ஒரு அங்கம்! அவ்வளவுதான்! ஒரு உயிர், அது மனிதனோ மற்றதோ, தோன்றி மறைவது என்பது பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை மிகச் சாதாரண விஷயம். ஆனால், ஒரு மனிதனின் தோற்றமும் மறைவும் இன்னொரு மனிதனுக்கு சந்தோஷமாகவோ, துக்கமாகவோ, அல்லது எந்த உணர்ச்சியையும் தூண்டாத ஒரு நிகழ்வாகவோ ஆவது அந்த மனிதனின் மனநிலையையும் அந்த நிகழ்வுடன் உண்டான தொடர்பையும் பொறுத்ததே! ஆனால், அந்த உணர்ச்சிகள் கூட நிலையற்றதே! ஒரு தாய்க்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் வரை இருக்கும் கவலை, அது கிடைத்தவுடன் மறைகிறது. ஆனால், குழந்தைப் பிறந்ததில் சந்தோஷமுற்ற தாய்க்கு, அந்தக் குழந்தை வளரும் போது செய்யும் குறும்பைச் சமாளிக்க முடியாமல் திணறும் போது சந்தோஷம் போய் "இந்த சனியன் ஏன்தான் பிறந்து தொலைத்ததோ?" என்று பேசுமளவு கோபம் வருகிறது. எனவே மனித சுகதுக்கத்தும் ஒரு உயிரின் தோற்ற மறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனிதனின் சுகதுக்கம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்பதே நிதர்சனம்.

மனிதன் மட்டுமில்லாது அனைத்து சக உயிரினங்களும் தோன்றுவதும் இந்த மண்ணில் தான், மறைவதும் இந்த மண்ணில் தான். வாழும் காலம் மட்டும்தான் மாறுபடுகிறதே தவிர, தோன்றிய ஒன்று அழிவது என்பது உறுதி. இப்படித் தோன்றி அழிவது உயிருள்ளவையாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பூகம்பம் வந்தால், அங்கே உயிருள்ளவை உயிரற்றவை என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்தும் மண்ணோடு மண்ணாகின்றன. எனவே இந்த மண்ணில் உயிருள்ளவை உயிரற்றவை என்ற அனைத்தும் சரிநிகர் சமானமானவையே! இப்படிப் பார்த்தால் கல், மண், மணல், கரி, சுண்ணாம்பு, இரும்பு, பித்தளை, தங்கம், முத்து, வைரம், வைடூரியம், மரம், செடி, கொடி, புல், பூடு, புழு, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், இறைச்சி, மனிதன் என அனைத்தும் எந்த வித உயர்வு தாழ்வுமற்ற பூமியின் அங்கங்களே! இவை அனைத்தும் மனிதனின் பார்வையில் உயர்வாகவோ, தாழ்வாகவோ இருக்கலாம். ஆனால், எப்படி பல வகையான பூச்சிகள் இருந்தாலும், மனிதனுக்கு அவையனைத்தும் எந்த வேறுபாடும் இல்லாமல் "பூச்சி" என்று மட்டும் படுகிறதோ, அதுமாதிரி பிரபஞ்சப் பார்வையில் இவை அனைத்தும் ஒன்றே. உயிருள்ளவை உயிரற்றவை என்ற வித்தியாசமும் அதற்கில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உடலின் அளவும், அறிவு வளர்ச்சியும், அதன் தனிப்பட்டத் திறமைகளும், சக்திகளும் மாறுபடுகிறதே தவிர, எதுவும் எதை விடவும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.

தொடரும் ...

No comments: