Sunday, November 22, 2009

பட்டினத்தார் - பகுதி 2

மனித உடம்பு பல ஆச்சர்யமான விஷயங்களை உள்ளடக்கிய compact intelligent biological design. நம் பல உறுப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களுக்குப் பயன்படுவது, மேலும் ஆச்சர்யகரமானது.

நமது கண் ஒரு சிறப்பான கேமரா. பார்ப்பதற்கு மட்டுமில்லாமல், நமது உணர்ச்சிகளைத் துல்லியமாக பிறருக்குக் காட்டுவதும் நம் கண்தான். பெண்களின் கடைக்கண் பார்வையில் மயங்காத வாலிபர்கள் எத்தனை பேர்? கவிஞர் வாலி கூட, "மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ? ..." என்று பாட்டெழுதியிருக்கிறார்.

சுவாசிக்க மட்டும்தானா மூக்கு? மூக்கில்லாவிட்டால் வாசனை தெரியுமா நமக்கு? சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் பேசுவதற்கும் வாய்தான் தேவைப்படுகிறது.

மல ஜலம் கழிக்க என்று நாம் முகம் சுழிக்கும் உறுப்புதான், நம் இனம் தளர வகை செய்யும் விருட்சம். இதனால்தான், ஹிந்துக்களிடையே லிங்க வழிபாடு வந்தது என்று வாதிடுபவர்களும் உண்டு.

நம் புற உடம்பு இப்படியிருக்க, நமது சிறிய அகத்துக்குள் பெரிய தானியங்கி எந்திரமே நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. நம் புற உறுப்புகளுக்கும் அகத்துக்கும் என்ன சம்பந்தம்? நமது அகம் வேலை செய்ய உணவு புற உறுப்புகளால்தான் கிடைக்கிறது.

பசி நேரத்தில் பிரியாணி வாசனை நம் பசியை மேலும் தூண்டுகிறது. உண்ணும் உணவு கெட்டுவிட்டதா என்பதை, நாக்கை விட மூக்கே முதலில் உணரவைக்கிறது. நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள் மூளைக்கு உணவின் சுவையை உடனே சொல்லிவிடுகின்றன. ஆனால், வயிறு நிரம்பி விட்டதை மூளை உணர இருபது நிமிடங்களாவது தேவைப்படுகிறது.

இதனால்தான் வள்ளலார் நம் உடலைக் கோவில் என்று கூறினார். ஆனால், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதங்களை நாம் மதிப்பதில்லை. காரணம், நம் உடம்பு எங்கும் பரவியிருக்கும் புலனுணர்வுகளுக்கு அடிமையாகி எதையும் அளவுக்கதிகமாக அனுபவிக்க நாம் துடிப்பதுதான்.

தொண்டைக்குள் இறங்கும் வரையில் தான் சுவை என்பது தெரிந்தும், ஒரு கைப்பிடி அளவே இருக்கும் நம் இரைப்பைக்குள் ஒரு கூடைச் சோற்றைத் திணிப்பது நம்மையறியாமல் நாம் தினமும் செய்வது. ஒரே பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்பது. அதுவும் மிக அதிக சத்தத்தில் headphone மாட்டிக்கொண்டு! புகைப் பிடித்து நுரையீரலை நாசம் செய்வதும், ஆல்கஹாலையும் கஞ்சா அபின் போன்ற போதைப் பொருள்களையும் உடம்புக்குள் செலுத்தி நம் உடம்பை நாமே நாசம் செய்வதும் இந்த அதிகப்படியான நாட்டத்தால் தான்!

செக்ஸ் என்ற சுகம் கூட நம் இனம் தளரவே! ஆனால், அதன் மீது அதிக நாட்டம் கூடுவதால் தான் சிவப்பு விளக்குப் பகுதிகளில் இன்னும் புரோக்கர்கள் வளமாக வாழ்கின்றனர். யோசித்துப் பார்த்தால் பசிக்கு புற உறுப்புகள் எப்படித் தேவையோ அதில் கொஞ்சமும் குறைவில்லாமல் செக்ஸ் சுகத்துக்கும் தேவைப்படுகின்றன. தொலை பேசியில் செக்ஸ், நீலப் படங்கள், மஞ்சள் பத்திரிகை, ஓரல் செக்ஸ் என்று பெரிய வர்த்தகமே உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது.

தன் உடல் பலத்தில் ஆண் கொண்ட அளவற்ற பற்றுதான் ஆணாதிக்கத்திற்குக் காரணம். சென்ற நூற்றாண்டு வரையிலும் கூட ஆணாதிக்கமே அதிகமிருந்திருக்கிறது. காந்தியடிகள்கூட கஸ்தூரிபாய் அம்மையாரிடம் சில நேரங்களில் கணவனான தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் தன் சொல்படி கேட்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்த ஆணாதிக்கத்தால், பழங்காலத்தில் பெண்கள் போகப் பொருளாகவேப் பார்க்கப்பட்டனர். தேவதாசி முறையும் இப்படி வந்ததுதான். "பரிசம் போட மாமன் வந்தான் ..." என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மாமன் மகளை, தன் முறைப் பெண்ணை பொருள் கொடுத்து வாங்குவதே "பரிசம் போடுதல்". இது காலப்போக்கில் தலைகீழாய் மாறி "வரதட்சிணை" என்று மாறிவிட்டது!

பெண்களுக்கே இந்தக் கதியென்றால், திருநங்கைகள் (அலி என்றும் ஒம்போது என்றும் தடை செய்யப்படவேண்டிய வார்த்தைகளால் அழைக்கப்படும் மூன்றாவது பாலினம்) பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. மனிதன் தன் உடல் மீது கொண்ட அதீதப் பற்றுதான், இவ்வினத்தைக் கேவலமாகப் பார்பதற்குக் காரணம். வேற்றுக் கிரகத்தவர்கள் பூமிக்கு வருவாதாகக் கற்பனை செய்துகொண்டால், அவர்களுக்கு ஆண், பெண், திருநங்கைகள், physically challenged (இதன் தமிழாக்கம் என்னவெனத் தெரியவில்லை. இவர்களை இன்னும் முடவன், குருடன், செவிடன் என்ற தடை செய்யப் படவேண்டிய வார்த்தைகளால் தான் அழைக்கிறோம்.) என அனைவரும் பகுத்தறிவு பெற்ற உயிரினமாகத்தான் (intelligent creatures) தோன்றுவோம். இலங்கையில் போரில் இறந்த அப்பாவி மக்களின் சதைப் பிண்டங்களில் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் பிரித்தெடுக்க முடியுமா?

இருப்பினும் நமக்கு தோல் நிறத்திலும், தோல் சுருக்கத்திலும், தலை முடி வளர்ச்சியிலும், பல் விழக்கூடாது என்பதிலும் அதீதப் பற்று இருக்கத்தானே செய்கிறது! உடல் நலத்துக்காக உடலின் எடையைக் குறைப்பதை விட நம் தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதில் தான் அதிக நாட்டம் நமக்கு!

இப்படிப்பட்ட அளவுக்கதிகமான நாட்டமெல்லாம் மனிதனுக்கு மட்டுமே உள்ள "மனம்" என்ற அதிசயமான ஒன்றால்தான் சாத்தியமாகிறது! மனம் பற்றி அடுத்த பதிவில் ...

தொடரும் ...

1 comment:

Gokula Krishnan said...

Good one.. Waiting for the next blog..

Physically challenged is now a days termed as "Differently abled" which is more apt...