Wednesday, November 18, 2009

பட்டினத்தார் - பகுதி 1

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, பட்டினத்தாரைப் பற்றி ஏதோ ஒரு blog-ல் " ... மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல இந்த ஆளையாக் கூப்பிட வேண்டும்?" என்பது போல எழுதி இருந்தார்கள் (எந்த ப்ளாக் என்று Google-ல் மீண்டும் தேடியும் கிடைக்கவில்லை). அதற்குக் காரணம் ஒரு கல்யாண வீட்டில், மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல, அவர் பாடிய கீழ்க்கண்ட பாடல்,

நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி,
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்,
பொலபொலனக்
கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்!
காப்பதற்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்,
கவர்பிளந்த
மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல,
அகப்பட்டீர்
கடந்துழல, அகப்பட்டீர் நீரே!


ஹாஸ்யத்துடன் கலந்த ஆசிர்வாதமான இதன் சாராம்சம் இதுதான்:
முதல் பாதி ஆசிர்வாதம்: நாக்கே பிளந்து கிழிந்து விடும் அளவுக்கு (நாப்பிளக்கப்) பொய்களைப் பேசி, ஒன்பது வகையான செல்வங்களைத் (நவநிதியம்) தேடி (ஒன்பது வகையான செல்வங்கள் என்னென்ன என்பது தெரியவில்லை!), நலம் என்று எதுவும் இல்லாத (நலமொன்றும் இல்லாத: நல்ல விஷயங்கள் எதுவும் இல்லாத என்றும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது பிறந்தது முதல் சுதந்திரம் இல்லாமை, பெண்மைக்கே உரியக் கொடுமையான மாதாந்திரக் கஷ்டம், பிரசவ வேதனை, கணவனுக்கு அடிமை, ஆண்களின் போகப் பொருள் என்று அந்தக் காலக் கட்டத்தில் நலமொன்றும் இல்லாது கஷ்டத்தையே அனுபவிக்கும் பிறவி என்றும் எடுத்துக் கொள்ளலாம்) பெண்களைக் (நாரியரை) கூடிப் பூமியையே பிளந்து விடுகின்ற அளவுக்கு (பூப்பிளக்க) ஈசல்கள் புற்றிலிருந்து வருவது போலப் பிள்ளைகளைப் பெறுவீர்களாக! (அந்தக் காலத்தில் "இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்!" என்று யாரும் இருந்ததில்லை)

மறு பாதி ஹாஸ்யம்: இவ்வாறு பொலப்பொல எனப் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமலும், அவர்களைக் கைவிட மாட்டாமலும் சம்சார வாழ்க்கையில் மாட்டிக்கொண்டீர்கள் என்று கூறிவிட்டு, இப்படி மாட்டிக்கொண்டதை ஆப்பசைத்த குரங்குக்கு ஒப்பிடுகிறார். அதென்ன ஆப்பசைத்த குரங்கு? மரத்தை நெடுக்காக அறுக்கும் பொழுது, அறுக்கும் கருவி (ரம்பம் அல்லது அதைபோன்ற ஏதாவது ஒன்று) மாட்டாமல் அறுக்க பிளவுக்கிடையில் ஆப்பு அடிப்பார்கள். ஆப்பு இல்லாவிடில் மரம் ஒட்டிக் கொண்டு, அறுப்பது கடினமாகி விடும். சில சமயம் மரம் பெரிதாக இருந்தால் அப்படியே விட்டுவிட்டு, அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று போய் விடுவார்கள். அப்படிப்பட்ட மரத்திலிருக்கும் ஆப்பை, குரங்கு தன் அடக்க முடியாத ஆர்வத்தால் தன் காலால் அசைத்துப் பார்க்கும் பொழுது ஆப்பு விடுபட்டு விட்டால் குரங்கின் கால் பிளவில் மாட்டிக்கொள்ளும். அச்சமயத்தில், தன் காலை எடுக்கவும் முடியாமல், எப்படி விடுபடுவது என்று தெரியாமல் குரங்கு படும் வேதனையைத்தான் "ஆப்பசைத்த குரங்கு" என்று மேற்கோள் காட்டி ஒப்பிடுகிறார்.

இதில் என்ன குறை? வார்த்தைகளை மீண்டும் கவனியுங்கள்: "நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி ...", "புற்றீசல் போல ... பிள்ளைகள் ...". சாதாரண மனிதர்களாகிய நமக்கு இது ஆசீர்வாதம் போலத் தோன்றாமல் சாபம் போலத் தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை! ஏனினில், நாம் நமக்கு ஏற்படும் அனுபவங்களைச் சுவைத்தே பழகியவர்கள். அதனால்தான், அந்த அனுபவம் நமக்குக் கொடுக்கும் பாடத்தை விட்டுவிட்டு, விட்டில் பூச்சி போலத் திரும்பத் திரும்ப அந்த சுவைக்கு அடிமைப் பட்டு, அதை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கின்றோம். அல்லது திரும்பத் திரும்பக் கஷ்டத்திலேயே உழலுகிறோம் என்றும் சொல்லலாம்.

இதனால்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் இவ்வாறு கூறுகிறார்:

யாமிமாம் புஷ்பிதாம் வாச்சம் பரவதந்த்யவிபக்ஷிதம்
வேதவாதரத்தாம் பார்த்த நான்யதஸ்த்தீத்தி வாதினம்
காமாத்மானம் சுவர்கப்பரா ஜன்ம கர்மphaலப்ரதாம்
விசேஷபஹுலாம் போகைஸ்வர்யகாதிம் ப்ரதி

இதன் ஆங்கில ஆக்கம் ஸ்ரீ பிரபுபாதா அவர்களின் வரிகளில்,

Men of small knowledge are very much attached to the flowery words of the Vedas, which recommend various fruitive activities for elevation to heavenly planets, resultant good birth, power, and so forth. Being desirous of sense gratification and opulent life, they say that there is nothing more than this.

(சிற்றறிவு கொண்ட மனிதர்கள் முக்தி அடையவும், மறுபிறப்பில் நற்(ல்)பிறப்பு அடையவும், மேன்மேலும் பல சக்திகளை அடையவும் வேதங்கள் சொல்லும் அலங்கார வார்த்தைகளில் பற்று வைத்து, அது ஏன் சொல்லப்பட்டது என்ற மூல காரணத்தைப் புரிந்து கொள்வதில்லை.)

எனவே, பட்டினத்தாரின் பாடல்களைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் மனித உடம்பையும், புலன்களையும், மனிதர்கள் தங்களுக்கென உருவாக்கிய நெறிகளையும் சாதாரண மனிதனின் பார்வையில் பார்த்து விட்டுப் பின்பு பட்டினத்தாரின் பார்வையில் பார்த்தால் அவர் பாடல்களின் ஆழத்தை உணர முடியும்.

தொடரும் ...


No comments: